சேட்ஜிபிடி அறிமுகமான நாளில் இருந்து பெருசு முதல் சிறுசு வரை அனைவராலும் செயற்கை நுண்ணறிவு பற்றி அதிகம் பேச்சப்பட்டு வருகிறது, ஒரு பகுதி மக்கள் இது வரபிரசாதம் என்று அழைத்தாலும், ஒரு பகுதியினர் இது ஆபத்து என கூறுகின்றனர். இப்படியிருக்கையில் ஒரு முக்கியமான ஆய்வு முடிவுகள் வெளியாகி இந்திய ஊழியர்களின் பயத்தை அதிகரித்துள்ளது.
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் தங்களுடைய வேலைவாய்ப்பு பறிபோகும் என்ற அச்சத்தில் அமெரிக்க, பிரட்டன், ஜெர்மனி நாட்டு ஊழியர்களை காட்டிலும் இந்திய ஊழியர்கள் அதிகப்படியான அச்சத்தில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகிறது. இதனால் ஏற்கனவே AI மூலம் வேலையை இழந்திடுவோமா என்ற அச்சத்தில் இருக்கும் இந்திய ஊழியர்கள் கூடுதல் பதற்றத்தில் உள்ளனர்.

Randstad நிறுவனத்தின் வொர்க் மானிட்டர் குவாட்டர்லி பல்ஸ் என்ற தலைப்பில் செய்யப்பட்ட ஆய்வில் வளர்ந்த நாடுகளில் 3ல் ஒருவர் செயற்கை நுண்ணறிவு மூலம் வேலைவாய்ப்பை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தில் இருப்பதால் இந்தியாவில் இரண்டில் ஒருவர் இத்தகைய பீதியில் உள்ளதாக இந்த ஆய்வு முடிவுகள் கூறுகிறது.
செயற்கை நுண்ணறிவு மூலம் தங்களுடைய வேலைவாய்ப்பு பறிபோகும் என்ற அச்சத்தில் இருக்க முக்கியமான காரணம் இந்தியாவில் பெரும் பகுதி மக்கள் BPO, KPO துறையில் பணியாற்றி வருவதால் தான். AI மூலம் பல்வேறு பணிகளை ஆட்டோமேஷன் செய்ய வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் காரணத்தால் இந்திய ஊழியர்கள் மத்தியில் அதிகப்படியான அச்சம் நிலவுவதாக Randstad நிறுவனத்தின் இந்திய தலைவர் விஸ்வநாதன் கூறுகிறார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தனது வர்த்தகத்திலும், சேவைகளிலும் உட்படுத்துவதன் மூலம் அதிகப்படியான செலவுகளை கட்டுப்படுத்த முடியும் என்பதால் இந்திய BPO, KPO துறை நிறுவனங்கள் விரைவாக AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த துவங்கியுள்ளனர். குறிப்பாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அனைத்தும் வாடிக்கையாளர் சேவை பிரிவில் அதிகளவில் AI தொழில்நுட்பத்தை உட்புகுத்தி வருகிறது.
இதனால் இப்பிரிவில் இருக்கும் ஊழியர்கள் தங்களுடைய எதிர்காலத்தை குறித்த அச்சத்தோடு இருப்பதை Randstad நிறுவனத்தின் வொர்க் மானிட்டர் குவாட்டர்லி பல்ஸ் ஆய்வு காட்டுகிறது. இந்த ஆய்வில் சுமார் 1606 பேர் பங்குபெற்றனர், இதில் 55 சதவீதம் பேர் ஆண்கள், 45 சதவீதம் பேர் பெண்கள்.


Click it and Unblock the Notifications