துபாய்: உலகிலேயே பெரும்பாலானவர்களின் கனவு நகரமாக மாறி இருக்கிறது துபாய். இதற்கு முக்கிய காரணம் அந்நாட்டின் உள்கட்டமைப்பு. இந்தியர்கள் பலர் ஆர்வத்துடன் வேலைக்கு செல்லும் இடமாகவும் துபாய் இருக்கிறது. இந்த டிரெண்ட் துபாய் ரியல் எஸ்டேட் துறையிலும் பிரதிபலித்துள்ளது.
துபாயில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய இந்தியர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டுவது ஆய்வறிக்கை ஒன்றில் தெரிய வந்துள்ளது. துபாய் ரியல் எஸ்டேட் சந்தை தொடர்பான 2023 நிதி ஆண்டுக்கான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளத.

பெட்டர் ஹோம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின் படி , இந்தியர்கள் துபாயில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி மற்றும் இந்தியாவுடன் ஒப்பிடும்போது அதிக அளவில் வாடகை வருமானம், வரி இல்லாத முதலீடுகள், உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்புகள், துபாய் கரன்சியின் மதிப்பு உயர்ந்து வருவது மற்றும் கோல்டன் விசா வசதி போன்ற பல்வேறு அம்சங்கள் இருப்பதால் பெரும்பாலான இந்தியர்கள் தற்போது இந்தியாவை விட துபாயில் முதலீடு செய்வதை விரும்புகின்றனர் என அந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. துபாய் போன்ற ஒரு நகரத்தில் ஒரு இடத்தை சொந்தமாக வைத்திருப்பது எதிர்காலத்தில் உதவும் என்ற மனப்பான்மையும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக அதிக சொத்து மதிப்பு கொண்ட இந்தியர்கள் பெரும்பாலானவர்கள் துபாயை தங்களுக்கு விருப்பமான நகரங்களின் பட்டியலில் முன்னிலையில் வைத்திருக்கின்றனர். இங்கே முதலீடு செய்வது லாபம் தரக்கூடியது மட்டுமின்றி, சொகுசான வாழ்க்கையை வாழ்வதற்கான வழிகளையும் ஏற்படுத்தி தருகிறது என நம்பிக்கையும் காரணம் என தெரிகிறது.
இந்தியாவை சேர்ந்த அதிக சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள் பலரும் துபாய் மற்றும் லண்டன் உள்ளிட்ட நகரங்களில் இதுபோல ரியல் எஸ்டேட் துறைகளில் அதிக முதலீடு செய்து வருகின்றனர். இதன் மூலம் இந்தியாவை தவிர வேறு நாடுகளில் சென்று வசிப்பதற்கான உரிமையை பெறுவதன் மூலம் அடுத்த தலைமுறையினர் சிறந்த உயர் படிப்பு, வேலை வாய்ப்பு, தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் ஆகியவையும் கிடைக்கின்றன.
இப்படி வெளிநாடுகளில் முதலீடு செய்பவர்கள் பல்வேறு கருத்துக்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. முதலில் அந்த நாட்டின் வளர்ச்சி மற்றும் அமைதி ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும் என சொல்லப்படுகிறது.
நீங்கள் வாங்கிய சொத்தினை மீண்டும் விற்கும்போது உங்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும், அதே போல அந்த நாட்டின் வரிவிதிப்பு முறையை கவனத்தில் கொள்வது மிக மிக அவசியம் என்கின்றனர் நிதித்துறை சார்ந்த நிபுணர்கள். வெளிநாட்டில் ரியல் எஸ்டேட் துறையின் முதலீடு செய்கிறீர்கள் என்றால் ஒரு நிதி ஆலோசகரிடம் அதில் உள்ள சாதக பாதகங்களை அறிந்து கொள்வது அவசியம் என்றும் கூறுகின்றனர்.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications