இந்திய மக்களின் செலவு பழக்கம் பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது. ஒரு நபர் ஒரு காஸ்ட்லியான ஸ்மார்ட்போனுக்கு ஒரு லட்சத்துக்கும் மேல் செலவழிக்கத் தயங்க மாட்டார். ஆனால் அதே நபர் ஒரு ஆப் வாங்க ரூ.99 செலவு செய்ய தயங்கி, இலவசமாக பதிவிறக்கம் செய்ய தேடுவார். தியேட்டருக்கு டிக்கெட் எடுத்து செல்லும் குடும்பம், பாப்கார்ன் வாங்க யோசிக்கும்.
இதேபோல், ராயல் என்ஃபீல்டு பைக்குக்கு 3 லட்சம் ரூபாய் கொடுக்கும் இளைஞர், ஸ்பாட்டிபை சேவைக்கு மாதம் ரூ.500 செலவு செய்ய மறுப்பார். மகளின் திருமணத்துக்கு 15 லட்சம் செலவு செய்யும் நபர், காய்கறி வாங்கும்போது ரூ.50 குறைக்க அரை மணி நேரம் பேரம் பேசுவார்.
இது வெறும் சிக்கனம் அல்ல; இதற்குப் பின்னால் ஆழமான மனோதத்துவ காரணங்கள் உள்ளது.

கண்களுக்கு தெரியும் நுகர்வு Vs தெரியாத நுகர்வு
இந்தியர்களின் ஷாப்பிங் எப்போது ஒரு பொருளை வாங்குவதில் இருக்காது சமூக அந்தஸ்தை வாங்குவது தான் அதன் மைய கருத்தாக இருக்கும், குறிப்பாக மிடில் கிளாஸ் மக்கள் மத்தியில் இந்த மனநிலை அதிகம் இருக்கும். குறிப்பாக 10000 ரூபாய்க்கு அதிகமாக வாங்கும் பொருட்கள் அனைத்திலும் சமூக அந்தஸ்தை மேம்படுவதாக இருந்தால் தயக்கம் இல்லாமல் வாங்குவார்கள். ஆனால் 100 ரூபாய்க்கு ஒரு எளிய விஷயம் கிடைக்கிறது என்றாலும் வாங்குவதற்கு தயங்குவார்கள்.
1.5 லட்சம் ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் வாங்குவது என்பது வெறுமென ஒரு போன் வாங்குவது மட்டுமல்ல, "நான் வெற்றி பெற்றுவிட்டேன்" என்பதை தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு காட்டுவதற்கான வாங்கப்படும் விஷயம். 3 லட்சம் ரூபாய் ராயல் என்ஃபீல்டு பைக் வெறுமென போக்குவரத்துக்கு பயன்படுத்தும் வாகனம் அல்ல, "நான் மற்றவர்களை காட்டிலும் வேறுபட்டவன்" என்பதற்கான அடையாளப்படுத்துவதற்காக.
ஆரம்பர திருமணம் வெறும் சடங்கு மட்டுமல்ல, தன் குடும்பத்தின் அந்தஸ்தை மற்றவர்களுக்கு காட்டும் நிகழ்வு. இவை அனைத்தும் மற்றவர்களுக்குத் தெரியும் வகையிலான செலவுகள் - Visible Consumption.
ஆனால் ஸ்பாட்டிபை பிரீமியம், 100 ரூபாய் கொடுத்து ஒரு ஆப் டவுன்லோடு செய்வது, நியூஸ்பேப்பர் சப்ஸ்கிரிப்ஷன் போன்றவை யாருக்கும் தெரியாது - Invisible Consumption. இதனாலேயே இவற்றுக்கு பணம் செலவு செய்வதை பலர் தவிர்க்கிறார்கள்.
ஸ்டார்பக்ஸில் ரூ.400 கொடுத்து காபி குடிப்பவர்கள் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்வார்கள். ஆனால் ஒரு யோகா செயலிக்கு ஆண்டுக்கு ரூ.1500 செலவு செய்வதை யோசிப்பார்கள், ஏனெனில் அது மிகவும் பர்சனல், யாரும் பாராட்ட மாட்டார்கள். இது தான் பாஸ் வித்தியாசம்.
சமூக அங்கீகாரமே முக்கிய இலக்கு
இந்திய மக்கள் "மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?" என்பதில் தான் அவர்களுடைய செலவு செய்யும் முடிவுகளை பெரிதும் தீர்மானிக்கிறது.
வீட்டில் ரூ.80,000 கொடுத்து தரமான சோஃபா வாங்குவார்கள், ஏனெனில் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள், நண்பர்கள், உறவினர்கள் அதை பார்ப்பார்கள் என்பதற்காக. ஆனால் பெட்ரூம்-ல் 10 வருட பழைய மெத்தை பயன்படுத்துவார்கள், ஏனெனில் அது யாருக்கும் தெரியாது என்பதற்காக.
இப்படி பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்திய மக்களிடம் பணம் இல்லாதது பிரச்சினை அல்ல; "மற்றவர்கள் இலவசமாகப் பெறுவதை நான் ஏன் பணம் கொடுத்து வாங்க வேண்டும்?" என்ற பயம் தான் பெரியதாக உள்ளது.
நம்முடைய சமூகத்தில் ஒரு பொருளை முழு விலை கொடுத்து வாங்குவது தோல்வியாகக் கருதப்படுகிறது, இதை பிறரிடம் கூறுவதற்கு கூட தயங்குவார்கள். ஆனால் அதே பொருளை இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ பெறுவது ஒரு வெற்றியாகக் கருதப்படுகிறது, மற்றவர்களிடம் சொல்வதில் பெருமைப்படுவார்கள். உதாரணமாக "டிஸ்கவுன்ட் சேல் நேரத்தில் அமேசான்/ப்ளிப்கார்ட்டில் வாங்கினேன்" என்று நண்பர்களிடம் பெருமிதத்துடன் பலரும் கூறியதை நாம் கேட்டு இருப்போம்.
இது சிக்கனமா அல்லது விளையாட்டா?
இந்தியர்களின் இந்த பழக்கம் வெறும் சிக்கனம் அல்ல; இது ஒரு வகை விளையாட்டு. தள்ளுபடி பெறுவது சமூகத்தில் சாதனையாக மாறிவிட்டது. நண்பர்களிடம் அதைப் பகிர்வது பெருமையாக மாறியுள்ளது.
இத்தகைய மனநிலை பல இடத்தில் நினைத்து செய்ய முடியாத சூழ்நிலையில் மன அழுத்தமாக மாறுகிறது. அல்லது எப்படியாவில் அந்த பொருட்களை வாங்க வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி அதை வாங்குவதும் நடக்கிறது.
எந்த ஒரு பொருளையும் நமக்கு அவசியமா, தேவையா என்பதை யோசித்து வாங்குங்கள். மற்றவர்களுக்கு முன் நம்முடைய தகுதியை உயர்த்த வேண்டும் என்பதற்காக கடன் வலையில் சிக்கிவிடாதீர்கள்.


Click it and Unblock the Notifications