டெல்லி: தமிழ்நாட்டில் மட்டும் அல்ல உலகளவில் இந்த வருடம் வெப்பம் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டு வரும் வேளையில், இந்த வருட கோடைக்காலத்தில் கடந்த ஆண்டை விடவும் அதிக வெப்பமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வெப்பத்தை தணிக்க அதிக எண்ணிக்கையில் ஏசி வாங்குவார்கள் என கணிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதில் மிகப்பெரிய பிரச்சனை வெடித்துள்ளது.
இந்தியாவில் ஏசி மற்றும் குளிர்சாதன பெட்டி உற்பத்திக்கு மிகவும் முக்கியமான கம்பிரஸர்கள் சீனாவில் இருந்து தான் அதிகம் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால் சீனாவில் இருந்து கம்பிரஸர்கள் இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் எழுந்துள்ளதால் இந்தியாவில் ஏசி மற்றும் குளிர்சாதன பெட்டி தயாரிப்பு மந்தமடைந்து, கோடைக்காலத்தில் விலை உயரும் நிலை ஏற்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் விரைவில் கோடை காலம் தொடங்க இருக்கிறது. அடுத்த ஆறு மாத காலத்திற்கு இந்தியாவில் ஏசி மற்றும் பிரிட்ஜ் விற்பனை அமோகமாக இருக்கும். கடந்த ஆண்டே ஏசி விற்பனை அதிகரித்தது மறக்க முடியாது. இந்த ஆண்டிலும் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தான் ஏசி உற்பத்தியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து கம்பிரஸர்கள் இறக்குமதி செய்வதில் சிக்கல் நீடிப்பதால் ஏசி மற்றும் குளிர்சாதன பெட்டிகள் உற்பத்தி மந்தமடைந்திருப்பதாக எக்னாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனாட்ல் டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் பதவி ஏற்ற உடன் சீன பொருட்கள் மீது அதிக வரியை விதிப்பார் என அச்சம் ஏற்பட்டது.
எனவே சீனாவை சேர்ந்த கம்பிரஸர் தயாரிப்பு நிறுவனங்கள் அதற்கு முன்னதாகவே டிசம்பர் மாதத்திலேயே தாங்கள் உற்பத்தி செய்த பெரும் எண்ணிக்கையிலான கம்பிரஸர்களை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்துவிட்டன.
இதனால் இந்தியாவிற்கு வர வேண்டிய கம்ப்ரஸர்கள் குறைந்துவிட்டன. அது மட்டும் இன்றி மத்திய அரசு குறிப்பிட்ட சில சீன நிறுவனங்களின் பொருளுக்கு பிஐஎஸ் தரச் சான்றிதழ் வழங்காமல் தாமதப்படுத்தி வருகிறது. இதனால் குறிப்பிட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் கம்பிரஸர்களை இறக்குமதி செய்ய வேண்டி இருக்கிறது. இதுவும் பிரச்சனைக்கு காரணம் என சொல்லப்படுகிறது.
அது தவிர ஏற்கனவே பிஐஎஸ் தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனங்களின் உரிமம் அடுத்த நான்கு மாதங்களுக்குள் காலாவதியாக இருக்கிறதாம். அதன்பிறகு இந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட தரச் சான்றிதழ் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து அரசு தரப்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகிவில்லை. இதனால் ஏசி தயாரிப்பு மற்றும் குளிர்சாதன பெட்டி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் சிக்கலில் இருக்கின்றன.
ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் ஏசி உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்படும் என ஆம்பர் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார். தற்போது சீனாவை விடுத்து மற்ற சந்தைகளில் இருந்து கம்பிரஸர்களை இறக்குமதி செய்ய முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
ஏசி மற்றும் குளிர்சாதனப்பெட்டி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் சார்பாக மத்திய அரசிடம் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் சீன நிறுவனங்களுக்கான பிஐஎஸ் தர சான்றிதழை நீட்டிக்க கோரி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய நிறுவனங்கள் தற்போது சீனாவை தவிர்த்து ஜப்பான் மற்றும் தென்கொரிய நிறுவனங்களிடம் இருந்து கம்பிரஸர்களை வாங்க முடிவு செய்துள்ளன. ஆனால் சீனாவை விட இந்த நாடுகளின் கம்பிரஸர்கள் விலை அதிகமாக இருக்கும் என்பதால் இது ஏசி மற்றும் குளிர்சாதன பெட்டி விலை உயர்வுக்கு வித்திடலாம் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications