இந்தியாவின் விமானப் போக்குவரத்து துறை கடந்த 50 வருடத்தில் இல்லாத வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது, ஒருப்பக்கம் உள்நாட்டு விமான சேவையில் வேகமான விரிவாக்கம், மறுப்புறம் மலிவு விலையில் விமான டிக்கெட், பஸ் - ரயில் டிக்கெட் விலைக்கும் விமான டிக்கெட் விலைக்கும் மத்தியில் குறைவான வித்தியாசம் ஆகியவை விமானத்தில் பயணிப்போர் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் விமான போக்குவரத்தில் இந்தியாவை அமெரிக்கா, சீனா, பிரிட்டன் போன்று உயர்த்த மத்திய அரசு முக்கியமான திட்டத்தை தீட்டியுள்ளது. மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரான கே.ராம்மோகன் நாயுடு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் 50 புதிய விமான நிலையங்களை உருவாக்கும் திட்டத்தை அறிவித்தார்.

ஜூன் 2, 2025 திங்களன்று சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) ஆண்டு பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், இந்தியாவை உலகளாவிய விமான மையமாக மாற்றுவதற்கு இந்த முயற்சியில் முக்கிய படியாக 50 புது விமான நிலையங்களை உருவாக்கப்படும் என்று வலியுறுத்தினார்.
2014-ஆம் ஆண்டில் இந்தியாவில் வெறும் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 162 ஆக உயர்ந்துள்ளன. இதன் மூலம் கடந்த 10 வருடத்தில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரு மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் 2030-ஆம் ஆண்டுக்குள் மேலும் 50 விமான நிலையங்களை உருவாக்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய விரிவாக்க திட்டம் வளர்ந்து வரும் இந்திய விமான பயணிகளுக்கு சிறப்பான சேவையை அளிக்கவும், உள்நாட்டில் சிறப்பான விமான போக்குவரத்து இணைப்பை உருவாக்குவதற்கும் இந்த 50 விமான நிலையங்கள் முக்கியமானதாக இருக்கும் என தெரிகிறது.
அரசின் உதான் (உடே தேஷ் கா ஆம் நாக்ரிக்) திட்டம், விமானப் பயணத்தை அனைவருக்கும் எளிதாக்கி, பிராந்திய இணைப்பை மேம்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 619 பிராந்திய வழித்தடங்கள் இயக்கப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு IATA நிகழ்ச்சியில் குறிப்பிட்டார். உதான் திட்டம் மூலம் சிறிய நகரங்களை முக்கிய நகரங்களுடன் இணைத்து, மலிவு விலையில் விமானப் பயணத்தை உருவாக்க வழிவகுத்துள்ளது.
இதேவேளையில் இந்தியாவில் விமானங்களின் எண்ணிக்கை அதிகளவில் உயர உள்ள வேளையில் இத்துறை வளர்ச்சிக்கும், இயக்கத்திற்கும் ஏதுவாக உலகளாவிய பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் (MRO) மையமாக இந்தியாவை மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்தார். இதன் மூலம் MRO துறை மட்டும் 2031-ஆம் ஆண்டுக்குள் 4 பில்லியன் டாலர் மதிப்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications