இந்திய அரசு நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1, 2024 முதல் ஜனவரி 12, 2025 வரையிலான காலக்கட்டத்தில் நேரடி வரி வசூல் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 12 வரை நிகர நேரடி வரி வசூல் சுமார் ரூ.16.90 லட்சம் கோடியை எட்டியுள்ளது, இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 15.88% அதிகமாகும்.

தனிநபருக்கான வரியில் ரீஃபண்டுகளுக்கு முன் கணக்கிடப்படும் மொத்த நேரடி வரி வசூல் இன்னும் அதிகமான வளர்ச்சியைக் காட்டியுள்ளது, கடந்த நிதியாண்டில் ரூ.17.21 லட்சம் கோடியிலிருந்து 19.94% உயர்ந்து தற்போது ரூ.20.64 லட்சம் கோடியாக உள்ளது. இருப்பினும், இந்த காலகட்டத்தில் வழங்கப்பட்ட ரீஃபண்டுகளும் கணிசமாக அதிகரித்து, 42.49% உயர்ந்து ரூ.3.74 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும் துறைவாரியாக ஆய்வு செய்யும்போது, கார்ப்பரேட் வரி வசூல் நிலையான செயல்திறனைக் காட்டியுள்ளது. மொத்த கார்ப்பரேட் வரி வசூல் ரூ.9.71 லட்சம் கோடியை எட்டியுள்ளது, இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.8.33 லட்சம் கோடியிலிருந்து அதிகரித்துள்ளது. ரீஃபண்டுகளுக்குப் பிறகு, நிகர கார்ப்பரேட் வரி வசூல் ரூ.7.68 லட்சம் கோடியாக உள்ளது, இது கடந்த நிதியாண்டில் ரூ.7.10 லட்சம் கோடியாக இருந்தது.
இதை தொடர்ந்து தனிநபர் வருமான வரி (கார்ப்பரேட் அல்லாத வரி) மொத்த வசூல் ரூ.10.45 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது, இது கடந்த ஆண்டில் ரூ.8.58 லட்சம் கோடியிலிருந்து பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
நேரடி வரிகள் என்பது கார்ப்பரேட் வரி, தனிநபர் வருமான வரி, பத்திரங்கள் பரிவர்த்தனை வரி, சமன்பாட்டு வரி, சொத்து வரி, வங்கி ரொக்க பரிவர்த்தனை வரி, ஹோட்டல் ரசீது வரி, வட்டி வரி, செலவு வரி, சொத்துரிமை வரி மற்றும் பரிசு வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை உள்ளடக்கியது.


Click it and Unblock the Notifications