மத்திய அரசின் முக்கிய வருவாய் பிரிவாக இருக்கும் நேரடி வரி வருவாய் வசூல் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நடப்பு நிதியாண்டில் அக்டோபர் 12 வரையிலான காலக்கட்டத்தில் நேரடி வரி வசூல் 6.33% அதிகரித்து ரூ.11.89 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கார்ப்ரேட் வரி வசூல் அதிகரித்ததாலும், டாக்ஸ் ரீபண்ட் குறைக்கப்பட்டதாலும் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
நாட்டின் மொத்த நேரடி வரி வசூல் ரூ.13.92 லட்சம் கோடியாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.13.60 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 2024-25 நிதியாண்டில் ரூ.2.41 லட்சம் கோடியாக இருந்த டாக்ஸ் ரீபண்ட் , தற்போது ரூ.2.03 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது, இது கிட்டத்தட்ட 16% சரிவாகும்.

மேலும் மொத்த வரி வசூலில் கார்ப்ரேட் வரி ரூ.4.91 லட்சம் கோடியிலிருந்து ரூ.5.02 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பங்கள் (HUF) உள்ளிட்ட கார்ப்ரேட் அல்லாத வரி வசூல் ரூ.5.94 லட்சம் கோடியிலிருந்து ரூ.6.56 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
பங்குப் பரிவர்த்தனை வரி (STT) ரூ.30,878 கோடியாக சிறிதளவு அதிகரித்துள்ளது. மற்ற மைனர் வரிகள் மூலம் ரூ.294 கோடி வசூலாகியுள்ளது. இந்த நிலையில் முழு 2025-26 நிதியாண்டுக்கான நேரடி வரி வசூல் அளவு இலக்காக ரூ.25.20 லட்சம் கோடியை அரசு நிர்ணயித்துள்ளது, இது முந்தைய ஆண்டை விட 12.7% அதிகமாகும். நடப்பு நிதியாண்டில் STT மூலம் ரூ.78,000 கோடி திரட்டவும் அரசு இலக்கு வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications