இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு மைல் கல் எனச் சொல்லும் வகையில் நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சென்னையில் உள்ள இன்டகிரல் கோச் ஃபேக்டரியில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. வந்தே மெட்ரோ ரயில் என்பது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் குறுகிய தொலைவு வடிவமாகும்.
நகர்ப்புற பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 250 கி.மீ. தொலைவுக்குள் இந்த ரயில் இயக்கப்படுகிறது. பயணிகளின் வசதியை அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வந்தே மெட்ரோ ரயில்கள் 100 கி.மீ. முதல் 250 கி.மீ. தொலைவு வரையில் இயக்கப்படுகிறது.

இந்த வரிசையில் அடுத்ததாக 1000 கி.மீ. வரை செல்லும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் உருவாக்கப்பட்டு வருகிறது.
வந்தே பரிசோதனைகள்: வந்தே மெட்ரோ ரயில்களின் பரிசோதனை ஓட்டம் ஜூலை மாதத்தில் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்லீப்பர் ரயில் பரிசோதனை ஓட்டம் நடைபெறும்.
இந்த முயற்சிகள் இந்திய ரயில் கட்டமைப்பை நவீனப்படுத்தும் மற்றும் பயணிகளின் வசதியை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளாக அமைந்துள்ளன. ரயில்வே அமைச்சகத்தின் பெருமைக்குரிய திட்டமாக வந்தே மெட்ரோ ரயில்கள் பார்க்கப்படுகின்றன.
வந்தே மெட்ரோ ரயில்கள் நாட்டில் உள்ள 125 முக்கிய நகரங்களை இணைக்க உள்ளன. வந்தே மெட்ரோ ரயில்கள் தொடக்கத்தில், சென்னை- திருப்பதி, புவனேஸ்வர்- பாலாசோர், லக்னௌ- கான்பூர் ஆகிய தடங்களில் இயக்கப்பட உள்ளன.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் வழித்தடங்களை விரிவுபடுத்துவது குறித்த ஆலோசனை நடந்து வருகிறது. சென்னை- அரக்கோணம் வழித்தடம் பற்றிய இறுதி முடிவு நிலுவையில் உள்ளது.
சிறப்பு அம்சங்கள்: வந்தே மெட்ரோ ரயில்கள் தற்போதுள்ள இரும்புப் பாதைகளில் பெருநகரங்கள் மற்றும் அருகில் உள்ள சிறிய நகரங்களுக்கு இடையே பயணிகளை ஏற்றிச் செல்லும்.
ரிசர்வ் செய்யப்படாத பயணிகள் வகுப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
விரைவான பயணம், அடுத்தடுத்த நிறுத்தங்கள் மூலம் வந்தே மெட்ரோ ரயில்கள் சிறப்பான பயணத்தை ஏற்படுத்த உள்ளன.
ஒவ்வொரு ரயில்களிலும் 12 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். அவற்றில் ஆட்டோமேடிக் கதவுகளும் சைடு சீட்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இதனால் பயணிகள் அதிகளவில் நிற்கும் வசதி கிடைக்கும்.
இந்த ரயில்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த ரயில்களில் 16 பெட்டிகள் இணைக்கப்படும்.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications