2023-24 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மத்திய அரசின் நிதி பற்றாக்குறை 4.51 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது மத்திய நிதியமைச்சர் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் இலக்கான 17.87 லட்சம் கோடி ரூபாயில் 25.3 சதவீதமாக உள்ளது என ஜூலை 31 ஆம் தேதி முடிவில் CAG அமைப்பு வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன.
கடந்த ஆண்டு இதே காலத்தில் அதாவது 2022 ஜூன் காலாண்டில் நிதி பற்றாக்குறை 21.2 சதவீதமாக இருந்க நிலையில், தற்போது 25.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் நிதி பற்றாக்குறை இலக்கில் 25.3 சதவீதம் வரையில் அடைய முக்கிய காரணம் மூலதனச் செலவினங்களில் ஏற்பட்ட தடாலடி உயர்வு தான்.

மூலதனச் செலவினங்கள் அதிகரித்துள்ளதோடு, மாநில அரசுகளுக்கான வரிப் பகிர்வை துரிதப்படுத்தியது, வரி அல்லாத வருவாயின் வளர்ச்சியை ஈடுகட்ட செய்யப்பட்ட முயற்சியால் நிதி பற்றாக்குறை அளவீடு அதிகரித்துள்ளது. நிதி பற்றாக்குறை என்பது அரசாங்கத்தின் மொத்த செலவுக்கும் வருவாய்க்கும் உள்ள வித்தியாசம்.
இந்த நிதி பற்றாக்குறை அளவை மையமாக வைத்து தான் மத்திய அரசு தனது நிர்வாகத்திற்கு தேவைப்படும் கடன்களின் அளவை கணக்கிட்டு பெறும். ஏப்ரல் - ஜூன் 2023 காலாண்டில் நிதி பற்றாக்குறை 2.10 லட்சம் கோடி ரூபாய், இக்காலக்கட்டத்தில் வரி வருமானம் 4.3 லட்சம் கோடி ரூபாய் தான், கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் 5.06 கோடி ரூபாயாக இருந்தது.
இதே ஏப்ரல் - ஜூன் 2023 காலாண்டில் மத்திய அரசின் மொத்த செலவுகள் 10.51 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதில் முக்கிய செலவாக நாட்டின் உள்கட்டமைப்புக்கு 3 மாதத்தில் 2.78 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளது, இது வருடாந்திர இலக்கில் 28 சதவீதமாகும். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 1.75 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் நாட்டின் நிதி பற்றாக்குறை அளவை 5.9 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது, இது கடந்த ஆண்டில் 6.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications