அமெரிக்க அதிபரான டிரம்ப் ஹெச்1பி விசா மீது அடுத்தடுத்து பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார், முதலில் 1,00,000 டாலர் கட்டணத்தை அறிவிதத் டிரம்ப் அரசு செப்டம்பர் 23 ஆம் தேதி ஹெச்1பி விசாவுக்கான லாட்டரி முறையை மொத்தமாக அகற்றி விட்டு திறன் அடிப்படையிலும், சம்பளம் அடிப்படையிலும் விசா வழங்கும் முறையை கொண்டு வருவதாக திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
இது மொத்த இந்திய ஐடி துறைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படும் வேளையில், இந்த மோசமான அறிவிப்பு மூலம் இந்தியாவில் ஒரு பிரிவுக்கு ஜாக்பாட் அடித்தது போல் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்தியாவின் பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பு சந்தையிலும் சமீபத்தில் ஏற்பட்ட ஒரு முக்கியமான மாற்றம் என்றால், அது கடந்த பத்தாண்டுகளில் ஐடி சேவை துறையில் உலகளாவிய திறன் மையங்கள் அதாவது ஜிசிசி நிறுவனங்களின் எண்ணிக்கை வலுவடைந்துள்ளது தான்.
ஜிசிசி என்பது வெளிநாடுகளில் இயங்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு கிளை அலுவலகம். இந்த அலுவலகத்தை தலைமையகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காரணத்தால் இது ஐடி சேவை நிறுவனங்களை காட்டிலும் கொஞ்சம் ஸ்பெஷல்.
இந்த ஜிசிசி நிறுவனங்கள் இந்திய ஊழியர்களை வைத்து செலவுகளைக் குறைப்பதற்கு மட்டுமின்றி, திறமையான ஊழியர்களை சொந்தமாக பணியில் அமர்த்தி வேகமாக வளர்ச்சி அடைய முடியும். இதேபோல் நிறுவனத்திற்கு தேவையான இன்னோவேஷன்-ஐ உருவாக்குதில் எவ்விதமான தங்கு தடையும் இல்லாமல் இயங்க முடியும். இப்படி ஜிசிசி அலுவலகம் மூலம் பல நன்மைகள் உள்ளது.
தற்போது ஹெச்1பி விசா கட்டுப்பாடுகள் மூலம் இந்தியாவில் அடுத்தடுத்து ஜிசிசி அலுவலகங்கள் திறக்கப்படலாம், இதேபோல் ஏற்கனவே இருக்கும் ஜிசிசி நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். இதனால் இந்திய டெக் ஊழியர்களுக்கு ஹெச்1பி விசா நெருக்கடியை சமாளிக்க புதிய வழி கிடைத்துள்ளது. பொதுவாக ஐடி சேவை நிறுவனங்களை காட்டிலும் ஜிசிசி நிறுவனங்களில் அதிகப்படியான சம்பளம் அளிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 வருடத்தில் மைக்ரோசாஃப்ட், சிஸ்கோ, ஜேபிமார்கன், சனோஃபி மற்றும் கார்ல் ஜெய்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்கள் இந்திய செயல்பாடுகளை விரிவுபடுத்தி பெரிய அளவிலான வெற்றிக் கண்டு உள்ளனர்.
பெங்களூரு அடிப்படையிலான நிறுவனமான ஏஎன்எஸ்ஆர் அறிக்கையின்படி, ஃபார்ச்சூன் குளோபல் 30 நிறுவனங்களில் மூன்றில் இரண்டு மற்றும் ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களில் 174 நிறுவனங்கள் இந்தியாவில் தனது ஜிசிசி அலுவலகத்தை அமைத்துள்ளது.
நாஸ்காம் அமைப்பின் தரவுகளின்படி, இந்தியாவில் தற்போது 1,800க்கும் மேற்பட்ட ஜிசிசி-க்கள் உள்ளன. இவை 19 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த ஜிசிசி அலுவலகங்களில் 95 சதவீதம் நாட்டின் ஆறு டாப் மெட்ரோ நகரங்களில் மட்டுமே உள்ளன.
இந்தியாவில் ஜிசிசி அலுவகங்களை அமைக்கும் நிறுவனங்கள் பெங்களூரு, ஹைதராபாத், புனே, குருகிராம், சென்னை மற்றும் மும்பை நகரங்களை தாண்டி சிறிய நகரங்களுக்கு செல்ல வேண்டும். இதற்காக பல மாநிலங்கள் தனிப்பட்ட முறையில் ஜிசிசி கொள்கையை அறிமுகம் செய்துள்ளது.
ஜிசிசி நிறுவனங்கள் இரண்டாம் நிலை நகரங்களுக்கு செல்வது மூலம் மெட்ரோக் நகரங்களின் அழுத்தத்தைக் குறைப்பதோடு, உயர்மதிப்புள்ள வேலைகள் மூலம் நாடு முழுவதும் வளர்ச்சி வாய்ப்புகள் அதிகரிக்கும்.
சிஐஐயின் கணிப்பின்படி, இந்தியாவின் உலகளாவிய திறன் மையத் துறை 2030ஆம் ஆண்டுக்குள் 200 பில்லியன் டாலர்கள் வருவாயைத் தாண்டும், இது 2024 ஆம் ஆண்டின் 64 பில்லியன் டாலர் அளவை விட மூன்று மடங்கு அதிகம்.


Click it and Unblock the Notifications