இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இரண்டாவது காலாண்டில் அதாவது ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 7.6% வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது பொருளாதார ஆய்வாளர்களின் எதிர்பார்ப்புகளை விட அதிகம் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வியாழக்கிழமை வெளியிட்ட தரவு காட்டுகிறது.
சந்தையில் பல பொருளாதார வல்லுனர்கள் செப்டம்பர் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 6.5 முதல் 6.7 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் எனக் கூறப்பட்ட நிலையிலும், RBI மதிப்பீட்டை விட 20 அடிப்படை புள்ளிகள் (0.20%) அதிகமான அளவீட்டை செப்டம்பர் காலாண்டு ஜிடிபி பதிவு செய்துள்ளது.
செப்டம்பர் காலாண்டில் மத்திய அரசின் செலவினங்கள் பெரிய அளவில் உயர்ந்துள்ளது, நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் மட்டும் மத்திய அரசு சுமார் 4.91 லட்சம் கோடி ரூபாயை நாட்டின் வளர்ச்சிக்காக செலவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இதன் அளவு 3.43 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

நிதிப் பற்றாக்குறை அளவீடு: 2023-24 ஏப்ரல்-அக்டோபர் காலத்தில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை ரூ.8.03 லட்சம் கோடியாக உள்ளது. நிதிப் பற்றாக்குறை என்பது மத்திய அரசின் செலவுக்கும் வருவாய்க்கும் இடையே உள்ள வித்தியாசமாகும்.
கன்ட்ரோலர் ஜெனரல் ஆஃப் அக்கவுண்ட்ஸ் (CGA) அமைப்பு வெளியிட்ட தரவுகளின்படி, அக்டோபர் மாதத்தின் இறுதி நிலவரத்தின் படி நிதிப் பற்றாக்குறை பட்ஜெட் மதிப்பீட்டில் 45 சதவீதத்தைத் தொட்டது என அறிவித்துள்ளது.
மத்திய அரசு தனது பட்ஜெட் அறிக்கையில் 2023-24 ஆம் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.17.86 லட்சம் கோடி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.9 சதவீதமாக இருக்கும் என அறிவித்திருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில், நிதிப் பற்றாக்குறை 2022-23 பட்ஜெட் மதிப்பீட்டில் 45.6 சதவீதத்தை மத்திய அரசு எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது..
வேலைவாய்ப்பின்மை: இந்தியாவில் நகர்ப்புறங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த வருடம் செப்டம்பர் காலாண்டில் 7.2 சதவீதமாக இருந்த நிலையில் 2023 செப்டம்பர் காலாண்டில் 6.6 சதவீதமாகக் குறைந்துள்ளது எனத் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) தெரிவித்துள்ளது.
மேலும் செப்டம்பர் காலாண்டில் ஆண்கள் வேலைவாய்ப்பின்மை அளவு கடந்த ஆண்டு 6.6 சதவீதத்தில் இருந்து தற்போது 6 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதேபோல் பெண்கள் வேலைவாய்ப்பின்மை அளவு 9.4 சதவீதத்தில் இருந்து 8.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
உள்கட்டமைப்புத் துறை: இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகள் வருடாந்திர அடிப்படையில் செப்டம்பர் மாதத்தில் 9.2 சதவீதம் வளர்ச்சியடைந்த நிலையில், அக்டோபர் மாதம் 12.1 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது என மத்திய அரசு வெளியிட்ட தரவுகள் கூறுகிறது.
இந்த 8 முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் சிமென்ட், நிலக்கரி, கச்சா எண்ணெய், மின்சாரம், உரங்கள், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்புப் பொருட்கள் மற்றும் ஸ்டீல் ஆகியவை அடங்கும். அக்டோபர் மாதம் நிலக்கரி, ஸ்டீல், சிமெண்ட், மின்சாரம் ஆகியவை 12 இலக்கு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
மேலும் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் மொத்த வளர்ச்சி 8.6 சதவீதமாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 8.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications