ஈரானில் போர் நிறுத்தம் அமலில் இருக்கிறது. நேற்றிலிருந்து பெரிய அளவிலான எந்த ஒரு தாக்குதலும் நிகழவில்லை. இந்த போர் நிறுத்தம் இப்படியே நீடிக்குமா அல்லது திடீரென தாக்குதல் தொடங்குமா என்பதை நம்மால் கணிக்க முடியவில்லை.
அமெரிக்க அதிபர் டிரம்ப் எந்த நேரத்திலும் எந்த மாதிரியான முடிவையும் எடுக்கக் கூடியவர். ஈரான் தரப்பு ஒருபோதும் தங்கள் நிலைபாட்டில் இருந்து கீழே வராமல் தொடர்ந்து அமெரிக்காவுக்கு டஃப் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் இந்த போர் நிறுத்த சமயத்தை சாதகமாக பயன்படுத்தி போதிய அளவு எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை இந்தியாவிற்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மத்திய அமைச்சர் ஹர்திப் பூரி கத்தாருக்கு இரண்டு நாள் பயணமாக செல்கிறார். இந்த இரண்டு நாள் பயணத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து எல்பிஜி உள்ளிட்டவற்றை வாங்குவது, அதனை துரிதமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வருவது குறித்த முக்கியமான டீலிங்கை அவர் மேற்கொள்ள இருக்கிறார். இந்தியா தனக்குத் தேவையான இயற்கை எரிவாயுவில் பாதியை வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. அதேபோல மூன்றில் ஒரு பங்கு lpg வெளிநாடுகளில் இருந்து தான் வாங்கப்படுகிறது.
பெரும்பாலும் எல்பிஜி நமக்கு மேற்காசிய நாடுகளில் இருந்து தான் வருகிறது அதிலும் கத்தார் தான் முக்கிய சப்ளையர். கிட்டத்தட்ட ஆறு வார காலமாக நீடித்த ஈரான் போரால் வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு எல்பிஜி, கச்சா எண்ணெய் உள்ளிட்ட எதுவும் வரவில்லை. அவ்வப்போது ஈரானிடம் அனுமதி பெற்று ஒன்று இரண்டு கப்பல்களில் எல்பிஜி மட்டுமே கொண்டுவரப்பட்டது.
எல்பிஜி வரத்து திடீரென நின்று போனதால் இந்தியாவில் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை தனக்கு தேவையான எல்என்ஜி-ஐ 45% கத்தாரிலிருந்து தான் வாங்குகிறது, 20 சதவீத எல்பிஜி கத்தாரிலிருந்து தான் கொள்முதல் செய்கிறது.
தற்போது போர் நிறுத்தம் வந்திருப்பதால் பல்வேறு நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு வளைகுடா நாடுகளில் இருந்து எல்பிஜி, கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் இந்தியா ஒரு படி மேலே சென்று அமைச்சர் ஹர்தீப் பூரியை கத்தார் நாட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறது. அவர் அங்கே சென்று இந்தியாவிற்கான எரிபொருள் சப்ளைக்கு முன்னுரிமை தர வேண்டும் என கத்தார் அரசாங்கத்திடம் வலியுறுத்த இருக்கிறார்.
ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் நேற்றுதான் அமலுக்கு வந்திருக்கிறது இன்றைய தினமே ஹர்திப் பூரி கத்தார் செல்கிறார் என்பதால் இயன்றவரை இந்த போர் நிறுத்த காலத்திலேயே முடிந்த அளவுக்கு அதிக எரிபொருட்களை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் மத்திய அரசு கவனம் செலுத்துவதையே இது காட்டுகிறது.


Click it and Unblock the Notifications