மத்திய அரசு நாட்டில் பழைய தொழிலாளர் சட்டங்களை எல்லாம் நீக்கிவிட்டு புதிதாக நான்கு தொழிலாளர் சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. பல்வேறு துறைகளிலும் தொழிலாளர்கள் நலனை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு மத்திய அரசு புதிய தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்தியது .
புதிய சட்டங்கள் மூலம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமூக நலத்திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த புதிய தொழிலாளர் சட்டங்கள் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. இந்த புதிய தொழிலாளர் சட்டம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன . அதற்கு ஒவ்வொன்றாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை அமைச்சகம் விளக்கம் தந்து வருகிறது .

அந்த வகையில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்வதை புதிய தொழிலாளர் சட்டம் கட்டாயமாக்கி இருக்கிறது என்ற ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொழிலாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் இதில் உண்மை இல்லை என விளக்கம் தந்துள்ளது. புதிய தொழிலாளர் சட்டத்தில் ஒரு வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை செய்ய அனுமதி என தெரிவிக்கப்பட்டிருக்கிறது .
வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை என்பது வாரத்தில் நான்கு நாட்களுக்கு ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்துவிட்டு மீதமுள்ள மூன்று நாட்கள் விடுமுறை கொடுக்கலாம் என்ற நெகிழ்வு தன்மை வழங்கப்பட்டுள்ளது. இதனை தவறாக பரப்புகிறார்கள் என கூறியுள்ளது. வாரத்தில் 48 மணி நேர வேலையை வாரத்தில் 4 நாட்கள், 5 நாட்கள் என பிரித்து கொள்ள அனுமதி தந்துள்ளது.
அப்படி பார்த்தால் வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்தால் மட்டுமே 12 மணி நேர வேலை. இந்த 12 மணி நேர வேலையில் உணவு இடைவெளி மற்றும் பிற இடைவெளிகள் அடங்கும். வாரத்தில் 48 மணி நேரத்திற்கு மேல் பார்க்கும் வேலைக்கு நிறுவனங்கள் வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிக சம்பளம் வழங்க உத்தரவிட்டுள்ளது.
எனவே ஒரு நாளைக்கு கண்டிப்பாக 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என பரவும் தகவலில் உண்மை இல்லை என்றும் வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை செய்யலாம் என்று தான் இந்த புதிய சட்டம் கூறுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது . வேலை நாட்களை நிர்ணயம் செய்யும் முன்பு நிறுவனமும் ஊழியர்களும் ஆலோசித்து ஒருமித்த கருத்து வந்த பின்னர் தான் நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசு கூறுகிறது.


Click it and Unblock the Notifications