மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் புதிய தொழிலாளர் சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தது. கோடிக்கணக்கான இந்திய தொழிலாளர் மற்றும் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய தொழிலாளர் சட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தியது.
புதிய தொழிலாளர் சட்டங்களில் கிராஜூவிட்டி எனப்படும் பணிக்கொடை வழங்குவதில் தொடங்கி , ஓவர் டைம் எனப்படும் கூடுதல் நேர பணிக்கான சம்பளம் உள்ளிட்டவை அனைத்தும் உயர்த்தப்பட்டன. சம்பள கட்டமைப்பே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் நிறுவனங்களுக்கு சற்றே செலவினங்களை அதிகரிக்கச் செய்திருக்கின்றன. இந்த புதிய தொழிலாளர் சட்டங்கள் மூலம் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான பங்களிப்பு தொகை என்பது அதிகரிக்கப்பட இருக்கிறது.

நிறுவனங்கள் ஊழியர்களின் சிடிசி-ஐ மாற்றாமல் வைத்திருந்தால் அதற்கேற்ப அவர்களின் டேக் ஹோம் அதாவது கைக்கு வரக்கூடிய சம்பளத்தின் அளவு குறையலாம். ஆனால் இது அவர்களின் பெயரில் தான் சமூக பாதுகாப்பு திட்டங்களில் வரவு வைக்கப்படும் என்பதால் இப்போது கிடைக்கவில்லை என்றாலும் பின்னாளில் பெரிய தொகையாக கிடைக்க போகிறது.
ஆனால் நிறுவனங்களை பொறுத்தவரை அவற்றின் செலவினம் சற்றே அதிகரிக்கும். இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் இந்த புதிய தொழிலாளர் சட்டங்களால் ஊழியர்களுக்கு வழங்கக்கூடிய சம்பளம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு செய்ய வேண்டிய செலவினம் உள்ளிட்டவை காரணமாக தங்களுக்கு கூடுதலாக 2,128 கோடி ரூபாய் செலவாகும் என கணிப்பு வெளியிட்டு இருக்கிறது.
ஹெச்சிஎல் நிறுவனம் 956 கோடி ரூபாய் செலவாகும் என தெரிவித்திருக்கிறது. பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய கிராஜுவிட்டி மற்றும் ஓவர் டைம்க்கான சம்பளம் உள்ளிட்டவற்றை மாற்றியமைக்க வேண்டி இருப்பதால் ஒரு குறுகிய காலத்திற்கு இந்த நிறுவனங்கள் ஊழியர்களுக்காக செய்யக்கூடிய செலவினத்தின் அளவு அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது . டெலாய்ட் நிறுவனத்தின் நிபுணர்களுள் ஒருவரான அலோக் அகர்வால் பல்வேறு நிறுவனங்களும் டிசம்பர் மாத காலாண்டில் தொழிலாளர்களுக்காக கூடுதல் செலவினத்தை செய்ய வேண்டி இருக்கும் என தெரிவித்திருக்கிறார்.
நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கக்கூடிய சிடிசி-ஐ மாற்றாமல் வைத்திருந்தால் ஊழியர்கள் கைக்கு வரக்கூடிய சம்பளத்தின் அளவு குறைவதற்கு வாய்ப்பு உள்ளது என கூறுகிறார். குறிப்பாக சேவை சார்ந்த துறையில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார். அடிப்படை சம்பளம் 50% கீழாக இருக்கக்கூடிய நிறுவனங்களில் எல்லாம் புதிய தொழிலாளர் சட்டங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், நிறுவனங்களுக்கு கூடுதல் செலவினத்தை உண்டாக்கும் என்கிறார்.
பொதுவாக நிறுவனங்களுக்கு ஊழியர்களுக்கு வழங்கக்கூடிய கிராஜுவிட்டு எனப்படும் பணிக்கொடை தான் கூடுதலாக ஏற்படக்கூடிய செலவினம். தற்போது அரசு கொண்டு வந்திருக்கக்கூடிய கிராஜுட்டி சம்பந்தப்பட்ட மாற்றங்கள் நிறுவனங்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும் என்கிறார். ஐடி மற்றும் உற்பத்தி துறை சார்ந்த இயங்கக்கூடிய அதிக தொழிலாளர்களை கொண்டு இயங்கக்கூடிய நிறுவனங்கள் பாதிப்பை சந்திக்கும் என்கிறார்.
கேபில் சர்வீஸ் நிறுவனமான ஹேத்வே புதிய தொழிலாளர் சட்டங்களால் தங்கள் நிறுவனத்துக்கு கூடுதலாக 2.89 கோடி ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறது. பல்வேறு நிறுவனங்களும் புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு ஏற்ப மாற்றங்களை கொண்டு வருவதாகவும் அதன் நிதி சார்ந்த தாக்கங்களை ஆய்வு செய்து வருவதாகவும் கூறியுள்ளன.


Click it and Unblock the Notifications