பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழுவின் உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் பேட்டி ஒன்றில் கூறியதாவது: நாம் இப்போது 2,500 டாலர் தனிநபர் வருமானத்தில் இல்லை. நாம் இப்போது 3,000 டாலர் தனிநபர் வருமானத்தில் இருக்கிறோம். இருப்பினும் அது இன்னும் குறைவாகவே உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அதிகரித்தால் தனிநபர் வருமானமும் அதிகரிக்கும். எனவே தனிநபர் வருமானம் அதிகமாக பெற, நீங்கள் அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தியை கொண்டிருக்க வேண்டும்.
பொருளாதார வளர்ச்சி
சர்வதேச அளவில் இந்தியா நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறுகிறது, இந்த வளர்ச்சி முக்கியமானது. ஆனால் நாம் அதை விரைவுப்படுத்த வேண்டும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சமீபத்திய ஆண்டுகளில் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3 லட்சம் கோடி டாலரிலிருந்து 4 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. சுமார் 35 ஆண்டுகால நீடித்த விரிவாக்கத்தின் விளைவுதான் இந்த வளர்ச்சி. இந்தியா தொடர்ந்து 6-7 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதேநேரத்தில் பல பெரிய பொருளாதாரங்கள் 2-3 சதவீதத்தை எட்டவே சிரமப்படுகின்றன. ஜப்பான் அல்லது ஜெர்மனி போன்ற நாடுகள் அரிதாகவே வளர்ச்சியடைகின்றன.
ஜெர்மனி
இந்தியா ஜெர்மனியை முந்தி மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது, இது அடுத்த 18 முதல் 24 மாதங்களில் நிகழக்கூடும். நாம் 6 சதவீத வளர்ச்சியில் உள்ளோம், அவர்கள் (ஜெர்மனி) 1 சதவீதத்துக்கும் குறைவாகவே வளர்கிறார்கள். உலகளாவிய எதிர்மறையான சூழல்கள் இரு நாடுகளையும் பாதிக்கும். இருப்பினும் முழுமையான வகையில், உலகளாவிய நிச்சயமற்ற தன்மை, வளர்ந்த நாடாக மாறுவதற்கான இந்தியாவின் லட்சியத்தை பாதிக்கிறது.
நாம் இதை விட வேகமாக வளர விரும்புகிறோம், ஒருவேளை ஆண்டுக்கு 7 சதவீதத்துக்கும் மேலாக. ஆனால் இந்த சூழ்நிலையில் இதை செய்வது கடினம். அதிக வளர்ச்சியை ஆதரிக்க, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தகளை (பிற நாடுகளுடன் மேற்கொள்ளும் வர்த்தக ஒப்பந்தம்) விரிவுப்படுத்தவும், புதிய உலகளாவிய நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டியதும் அவசியம். உள்நாட்டில் பணவீக்கம் குறைந்து தற்போது 3 சதவீதமாக உள்ளது. இது நீண்ட காலத்திலிருந்து நடுத்தர காலத்திற்கு மூலதன செலவை குறைக்க இடமளிக்கிறது.
ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி இந்தியாவின் சந்தையை ஒன்றிணைத்துள்ளது. இதில் சீர்த்திருத்தங்கள் தேவைப்பட்டாலும், இது பெரிய முன்னேற்றம். ஜிஎஸ்டியை மேம்படுத்துவது குறித்து எப்போதும் புகார்கள் உள்ளன. ஆனால் உண்மையில் ஜிஎஸ்டி ஒரு பெரிய புதுமை என்பது உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications