இந்தியாவில் பணியாளர்களுக்கு 2026-ஆம் ஆண்டில் சராசரியாக எவ்வளவு ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது என்பது குறித்து ஒரு புதிய ஆய்வு வெளிவந்துள்ளது. இதன்படி 2026ஆம் ஆண்டில் சராசரியாக 9% ஊதிய உயர்வு இருக்கும் என தெரிவிக்கிறது. இது 2025-ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் 8.9% ஊதிய உயர்வை விட சற்றே அதிகமாகும்.
ஊதிய உயர்வு மற்றும் பணியாளர்கள் வெளியேறும் போக்குகள் குறித்த Aon 2025-26 ஆண்டு ஆய்வறிக்கையின்படி, 2026-இல் அதிக ஊதிய உயர்வைப் பெறும் துறைகளாக ரியல் எஸ்டேட்/உள்கட்டமைப்பு (10.9%) மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (10%) இருக்கும்.

அதே நேரத்தில், தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் சேவைகள் துறையில் மிகக் குறைந்த ஊதிய உயர்வு (6.8%) எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தொழில்நுட்ப தளங்கள் மற்றும் தயாரிப்புத் துறையில் 9.4% ஊதிய உயர்வு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய திறன் மையங்கள் சுமார் 9.5% ஊதிய உயர்வை வழங்கக்கூடும். "சவால்கள் இருந்தாலும், இந்தியாவின் பொருளாதாரம் உள்நாட்டு நுகர்வு, முதலீடுகள் மற்றும் கொள்கை நடவடிக்கைகள் மூலம் தொடர்ந்து வலுவாக உள்ளது" என்று இந்த அறிக்கை குறிப்பிட்டது.
வாகன உற்பத்தி, பொறியியல் வடிவமைப்பு சேவைகள், சில்லறை வர்த்தகம் மற்றும் உயிரியல் அறிவியல் போன்ற துறைகளும் மற்றவற்றை விட சற்றே அதிக ஊதிய உயர்வை 2026-இல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது முக்கியமான திறமை வாய்ந்த பணியாளர்களில் தொடர்ந்து முதலீடு செய்வதை பிரதிபலிக்கிறது. "இந்தியாவின் வளர்ச்சிப் பாதை, உள்கட்டமைப்பு முதலீடுகள் மற்றும் கொள்கை நடவடிக்கைகளால் வலுப்பெற்றுள்ளது," என்று ஏயோன் நிறுவனத்தின் கூட்டாளரும், ஆலோசனைத் தலைவருமான ரூபங்க் சவுத்ரி தெரிவித்தார்.இந்த ஆய்வின்படி, ஒட்டுமொத்த பணியாளர் வெளியேற்ற விகிதம் குறைந்துள்ளது. 2023-இல் 18.7% ஆகவும், 2024-இல் 17.7% ஆகவும் இருந்த இந்த விகிதம், 2025-இல் 17.1% ஆக குறைந்துள்ளது.
"இந்த படிப்படியான குறைவு, பணியாளர்கள் தக்கவைப்பில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் காட்டுகிறது" என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. பணியாளர்கள் நிலைத்தன்மையடையும்போது, நிறுவனங்கள் திறன் மேம்பாட்டு திட்டங்களில் முதலீடு செய்து, எதிர்கால தேவைகளுக்கு தயாராக முடியும் என கூறுகிறது.
தொழில்முறை சேவைகள் நிறுவனமான ஏயோன், 45 துறைகளில் உள்ள 1,060-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தரவுகளை ஆய்வு செய்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications