சென்னை: 2023-24ம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் அதாவது ஜனவரி - மார்ச் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.8 சதவீதம் வளர்ச்சி அடைத்துள்ளதாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்டமிடல் துறை (MOSPI) வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவல்கள் அதிகாரப்பூர்வ தகவலில் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் 2023-24 ஆம் நிதியாண்டின் நாட்டின் மொத்த மொத்த ஜிடிபி வளர்ச்சி 8.2 சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசு தற்போது மதிப்பிட்டுள்ளது.

இதேவேளையில் மத்திய அரசு 3ஆம் காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி விகிதத்தைத் திருத்தியுள்ளது. முன்பு 8.4 சதவீதமாக அறிவித்த ஜிடிபி வளர்ச்சி 8.6 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளதாகத் திருத்தியுள்ளது. இதன் மூலம் 2023-24 ஆம் நிதியாண்டில் முதல் காலாண்டில் 8.2 சதவீதம், 2வது காலாண்டில் 8.1 சதவீதம், 3வது காலாண்டில் 8.6 சதவீதம், 4வது காலாண்டில் 7.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது மத்திய அரசு.
2022-23ம் ஆண்டில் 6.7 சதவீதமாக இருந்த உண்மையான மொத்த மதிப்புக் கூட்டு (Real Gross Value Added - GVA) வளர்ச்சி, 2023-24ம் ஆண்டில் 7.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம், 2022-23ம் ஆண்டில் (-)2.2 சதவீதமாக இருந்த தொழில்துறை வளர்ச்சி, 2023-24ம் ஆண்டில் 9.9 சதவீதமாக அதிகரித்ததும், 2022-23ம் ஆண்டில் 1.9 சதவீதமாக இருந்த சுரங்கத் துறை வளர்ச்சி, 2023-24ம் ஆண்டில் 7.1 சதவீதமாக உயர்ந்ததும் தான் என்று அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி, கடைசி காலாண்டின் நாட்டின் ரியல் ஜிடிபி வளர்ச்சி7 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிட்டிருந்தது. ராய்ட்டர்ஸ் கருத்துக் கணிப்பு (Reuters poll) பலவீனமான தேவை காரணமாக, ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.7 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்த்திருந்தது.
ஆனால் அனைத்து தரப்பு கணிப்புகளையும் உடைத்தெறிந்து ஜனவரி - மார்ச் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.8 சதவீதம் வளர்ச்சி அடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வெளியிட்ட அறிக்கை, கடைசி காலாண்டில் 7.4 சதவீத வளர்ச்சியைக் கணித்து, முழு நிதியாண்டின் மதிப்பீட்டை 8 சதவீதமாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு முழு நிதியாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சியை 8.2 சதவீதமாக இருக்கும் மதிப்பிட்டுள்ளது.
மொத்தத்தில், இந்தியப் பொருளாதாரம் எதிர்பார்ப்புகளை மீறி வலுவான வளர்ச்சியை அடைந்துள்ளது. இது வரும் காலங்களில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
2024 ஆம் நிதியாண்டில் நாட்டின் வேளாண்மைத் துறை மற்றும் சுரங்கத் துறை போன்ற முக்கியமான துறைகளைக் கொண்ட ப்ரைமரி செக்டார் வருடாந்திர அடிப்படையில் 2.1 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. விவசாயம் துறை கடந்த ஆண்டு 4.7 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 1.4 சதவீதமாக உள்ளது. இதேபோல் சுரங்கத் துறைகள் 1.9 சதவீதத்தில் இருந்து 7.4 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
உற்பத்தி, மின்சாரம் மற்றும் கட்டுமான உதிரிப்பாகங்கள் உட்பட இரண்டாம் நிலைத் துறை, வருடாந்திர அடிப்படையில் 9.7 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. உற்பத்தித் துறை 9.9 சதவீத வளர்ச்சியையும், மின்சாரம் 7.5 சதவீத வளர்ச்சியையும் கண்டுள்ளது. கட்டுமான துறை 9.9 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications