நம் நாட்டில் விலைமதிப்புள்ள கற்கள், மாணிக்கங்கள், மரகதங்கள் போன்றவை அரிதாக கண்டுபிடிக்கப்படும். அப்படித்தான் விலைமதிப்புள்ள பிங்க் நிற வைரம் ஒன்று 1950-ஆம் ஆண்டில் ஒரு சுரங்கத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பிங்க் நிற பல்காரி வைரத்தை ஜெனிவாவில் நடைபெற்ற ஏலத்தில் 14.6 மில்லியன் டாலருக்கு ஏலம் விட்டுள்ளனர். அதாவது இந்திய மதிப்புக்கு இது 1300 கோடி ரூபாய்.
இந்த அரிய வகை பல்காரி பிங்க் நிற வைரம் 1950-ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து ஒரு குடும்பம் வாங்கி வைத்திருந்தது. சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களுடைய பாதுகாப்பில் இருந்த இந்த பிங்க் நிற வைரம் தற்போது ஏலம் விடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த கோல்கொண்டா சுரங்கத்திலிருந்து வரலாற்று சிறப்புமிக்க பல வைரக் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பிரிட்டன் மகாராணி கிரீடத்தில் பதிக்கப்பட்டுள்ள உலகப் புகழ்பெற்ற கோஹினூர் வைரம் உட்பட பல வரலாற்று சிறப்புமிக்க வைரங்கள் இந்த கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து தான் வெட்டி எடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஏலம் விட்ட விற்பனையாளரின் கொள்ளு தாத்தா மற்றும் பாட்டியால் வாங்கப்பட்ட இந்த வைரம் இத்தாலியின் ரோம் நகரில் உள்ள பல்காரி நிறுவனத்திடம் நகை வடிவில் செதுக்கப்பட்டது. அதனால் தான் பல்காரி பிங்க் நிற வைரம் என பெயர் பெற்றது.
ஜெனிவாவில் நடைபெற்ற ஏலத்தில் பேசிய ஏல நிறுவனத்தின் தலைவர் மேக்ஸ் ஃபாவ்செட், இந்த அரிதான வைரத்தை "மோனலிசா ஆஃப் பிங்க் டைமண்ட்" என்று வர்ணித்துள்ளார். பல்காரி வைரம் 15 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் வரை விலை போகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்.. தற்போது 12.1 மில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு ஏலம் போயுள்ளது. அதாவது 14.6 மில்லியன் டாலர்.
பல்காரி வைரம் நைட்ரஜன் மற்றும் போரான் போன்ற மாசுக்கள் எதுவும் இல்லாத அரிதான டைப் எல்எல்ஏ வகையை சேர்ந்தது என்றும் கூறப்படுகிறது. மேலும் பலராலும் விரும்பப்படும் ஃபேன்சி இன்டென்ஸ் பிங்க் நிறத்திலும், VVS2 எனப்படும் உயரிய தெளிவையும் கொண்டுள்ளது.
ஜெம்மாலஜிகல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அமெரிக்காவின் துணைத் தலைவரான டாக்டர் வுயி வாங் இயற்கையான இளஞ்சிவப்பு வைரங்கள் பெரும்பாலான ஒரு கேரட்டுக்கு குறைவாக தான் கண்டுபிடிக்கப்படும். ஆனால் 24 கேரட் கொண்ட இந்த வைரம் இயற்கையின் அற்புதமான படைப்புகளில் ஒன்று. இதன் அகலமான எமரால்டு கட் வைரத்தின் அழகை தெள்ளத்தெளிவாக பிரதிபலிக்கிறது, என்று பாராட்டியுள்ளார். இந்த ஏலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ஆப்பிரிக்காவில் உள்ள கரோவ் சுரங்கத்தில் 37.4 எடை கொண்ட மற்றொரு வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரத்தின் ஒரு பாதி அடர் இளஞ்சிவப்பு நிறத்திலும் மறு பாதி நிறமற்றும் இருந்தது. இந்த வைரமும் வரலாற்றில் அரிதான ஒன்றாக மாறும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.


Click it and Unblock the Notifications
