உலக அளவில் வருமான சமத்துவமின்மை குறித்து ஆராய்ச்சி செய்து வரும் World Inequality Lab வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று இந்திய மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. இந்தியாவில் பணக்காரர்களின் செல்வம் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக இந்த அமைப்பின் ஆய்வுகள் கூறுகிறது.
இந்தியாவின் மொத்த வருமானத்தில், பெரும் பணக்காரர்களின் பங்கு பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளை விட அதிகமாக உள்ளது என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதாவது பணக்காரர்களின் சொத்து மதிப்பு, வருமானம் அதிகரிக்கும் வேளையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வருமானம் குறைவதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

2023 ஆம் ஆண்டின் இறுதியில், இந்தியாவின் மொத்த செல்வத்தில் 40.1 சதவீதம் நாட்டின் 1 சதவீத பணக்காரர்களின் வசம் உள்ளது. இது 1961 ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவான மிக அதிகப்படியான அளவாகும்.
அதேபோல், நாட்டு மக்களின் மொத்த வருமானத்தில் அவர்களது பங்கு 22.6 சதவீதமாக இருந்தது, இது 1922 ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவான அதிகப்படியான அளவீடாகும். இதன் மூலம் நாட்டின் 1 சதவீத மக்கள் மட்டுமே அதிகப்படியான பணத்தையும், வருமானத்தையும் பெற்று வருகின்றனர்.
1947 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற இந்தியா, 1992 ஆம் ஆண்டில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு தனது சந்தைகளை திறந்ததில் இருந்து, நாட்டின் பில்லியனர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக ஸ்டார்ட்அப் வளர்ச்சிக்கு பின்பு HNI, UHNI எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வந்தது.
இந்த நிலையில் World Inequality Lab அமைப்பு 'இந்தியா வருமானம் மற்றும் செல்வம் சமத்துவமின்மை 1922-2023: பில்லியனர் ராஜ்-ன் எழுச்சி' என்ற தலைப்பிலான இந்த ஆய்வுக் கட்டுரை வெளியிட்டது. இதில் 2014-15 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்தில், செல்வம் குவிப்பில் ஏற்பட்ட சமத்துவமின்மை மிகவும் அதிகமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆய்வுக் கட்டுரையை எழுதியவர்கள் பாரிஸ் பொருளாதார பள்ளி மற்றும் உலக சமத்துவமின்மை ஆய்வகத்தைச் சேர்ந்த தாமஸ் பிகெட்டி, ஹார்வர்ட் கென்னடி ஸ்கூல் மற்றும் உலக சமத்துவமின்மை ஆய்வகத்தைச் சேர்ந்த லூகாஸ் சான்செல், மற்றும் நியூயார்க் பல்கலைக்கழகம் மற்றும் உலக சமத்துவமின்மை ஆய்வகத்தைச் சேர்ந்த நிதின் குமார் பாரதி ஆகியோர் ஆவர்.
நவீன இந்திய முதலாளிகள் தலைமையிலான பில்லியனர் ராஜ் காலம் என்பது பிரிட்டிஷ் ராஜ் தலைமையிலான காலனித்துவ கால ஆட்சியாளர்கள் காலத்தை விட அதிகப்படியான வருமான சமத்துவமின்மை கொண்டதாக உள்ளது என்று இக்கட்டுரையின் ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

2014-15 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்தில், செல்வம் குவிப்பில் ஏற்பட்ட அசமத்தன்மை மிகவும் அதிகமாக உள்ளது. 2022-23 ஆம் ஆண்டில், டாப் 1 சதவீதத்தினர் வருமானம் பங்கீடு 22.6 சதவீதம் மற்றும் செல்வ பங்கீடு 40.1 சதவீதம் என்ற வரலாற்று உச்ச அளவில் உள்ளது.
இத்தகைய சமத்துவமின்மை செல்வத்தில் மோசமான வித்தியாசம் கொண்ட தென்னாப்பிரிக்கா கூட இல்லை, ஏன் வல்லரசு நாடான அமெரிக்காவில் கூட இல்லை என்பதையும் இந்த ஆய்வறிக்கை காட்டுகிறது. இதேபோல் இந்தியாவின் வருமான வரி விகித அளவீட்டை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது என்பதையும் இக்கட்டுரை விளக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications