பட்ஜெட் என்பது ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு முக்கியமோ அதேபோல ஒரு நாட்டிற்கும் முக்கியமானது. இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் மூலம் அரசின் நிதி நிலைமை மக்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. இந்த பட்ஜெட் அறிக்கை, அரசின் வருவாய் மற்றும் செலவுகளை மதிப்பிட்டு, எதிர்கால திட்டங்களுக்கான தகவல்களை நாட்டு மக்களுக்கு வழங்குகிறது. இந்த கட்டுரையில், பட்ஜெட் என்றால் என்ன, அதில் என்னென்ன அடங்கும், எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற விவரங்களைப் பார்ப்போம்.
யூனியன் பட்ஜெட் என்றால் என்ன?: அரசியலமைப்பின் 112வது பிரிவின்படி, பட்ஜெட் என்பது அரசின் மதிப்பிடப்பட்ட வரவு மற்றும் செலவுகளின் "வருடாந்திர நிதிநிலை அறிக்கை" ஆகும். எனவே, பட்ஜெட் நாட்டின் நிதிக்கான ஒரு வரைபடம் போன்றது.

அரசாங்கம் எவ்வளவு பணம் செலவழிக்க திட்டமிட்டுள்ளது மற்றும் எந்தெந்த பகுதிகளில் அவ்வாறு செய்ய உத்தேசித்துள்ளது என்பது போன்ற விவரங்கள் தெரியவரும். இதன் விளைவாக, தொழில்துறை முதல் சாமானியர் வரை நாட்டின் ஒவ்வொரு பிரிவினருக்கும் என்ன தாக்கம் ஏற்படும் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.
பட்ஜெட் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று ரெவென்யூ பட்ஜெட் மற்றும் மற்றொன்று கேப்பிட்டல் பட்ஜெட்.
ரெவென்யு பட்ஜெட்: அரசின் அன்றாட செலவுகளையும் வருவாய்களையும் கொண்டுள்ளது. கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு போன்ற பொது சேவைகளுக்கான செலவுகள் இதில் அடங்கும். வருமான வரி, கலால் வரி, சுங்க வரி போன்ற நேரடி மற்றும் மறைமுக வரிகளின் மூலம் வரும் வருவாயும் இதில் அடங்கும். அரசாங்க கட்டணங்கள், அபராதம் வசூலிப்பு போன்ற வழிகளில் வரும் வரி அல்லாத வருவாயும் இதில் கணக்கிடப்படுகிறது.
கேப்பிட்டல் பட்ஜெட்: அரசின் நீண்ட கால முதலீடுகள் மற்றும் கடன்களைக் கொண்டுள்ளது.
சாலைகள், ரயில்வே, மின்சாரம் போன்ற துறைகளில் செய்யப்படும் உட்கட்டமைப்பு முதலீடுகள் இதில் அடங்கும்.
யூனியன் பட்ஜெட் 2024 எப்போது தாக்கல் செய்யப்படும்?: யூனியன் பட்ஜெட் 2024 - ஜூலை 23, 2024 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அவர் 6 பட்ஜெட்டுகளை சமர்ப்பித்த, மொரார்ஜி தேசாய்வை பின்னுக்குத் தள்ளி, தொடர்ச்சியாக 7 யூனியன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையைப் இதன் மூலம் பெற இருக்கிறார். பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடக்க இருக்கிறது.
இந்த ஆண்டு ஜூலை மாதம் ஏன் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது?: தேர்தல் காரணமாக, இந்த ஆண்டு ஜூலை மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
வழக்கமாக பிப்ரவரியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும், ஆனால் தேர்தல் ஆண்டு வரும்போதெல்லாம் 2 பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்படும். தேர்தலுக்கு முன் பிப்ரவரியில் ஒன்று, இது இடைக்கால பட்ஜெட் என்று அழைக்கப்படுகிறது. இது தேர்தல் முடிவுகள் வரும் வரையிலான காலகட்டத்திற்கு மட்டுமே, மற்றொன்று ஜூலையில், தேர்தலுக்குப் பிறகு மீதமுள்ள நிதியாண்டு, முழுவதற்கும் தாக்கல் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications