இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான காரணம், அரசின் வலுவான மூலதனச் செலவினங்கள் தான். இதேவேளையில் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கீடு வகிக்கும் தனியார்த் துறை நுகர்வு என்பது பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் கேள்விக்குறியாகி நிற்கிறது.
மக்களின் நுகர்வு குறைவது என்பது, வீடுகள் அல்லது நிறுவனங்களின் சேமிப்பு குறைவதையும், அவர்களின் செலவிடும் திறனையும் பாதிக்கிறது. இதன் விளைவு நேரடியாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் மீதும் விழும். இதை இன்னும் எளிமையாகச் சொல்வதென்றால், மக்கள் செலவு செய்யாவிட்டால், நிறுவனங்கள் உற்பத்தி செய்யாது. நிறுவனங்கள் உற்பத்தி செய்யாவிட்டால், ஊழியர்களுக்கு அதிக ஊதியங்கள் வழங்கப்படாது, வேலைவாய்ப்புகள் கிடைக்காது. மக்களுக்கு ஊதியம் கிடைக்காவிட்டால், அரசுக்கு வரி வருவாய் குறையும்.

இந்த நிலையில் பொருளாதார வல்லுநர்கள், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி அளவீட்டையும், மக்களின் நுகர்வு இடையே உள்ள இந்தப் பெரும் வேறுபாட்டைக்கு மத்திய அரசுக்கு பட்ஜெட் குறித்த கூட்டத்தில் முன்வைத்துள்ளனர். இந்த இடைவெளியைக் குறைக்க மத்திய நிதியமைச்சகம் இந்த பட்ஜெட் அறிக்கையில் குறிப்பிட்ட வருமான வரம்புகளில் இருக்கும் மக்களுக்கு வரி குறைப்பை அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023 நிதியாண்டில் இந்தியாவின் தனியார் நுகர்வு வளர்ச்சி 4 சதவீதமாக இருந்தது, இது கொரோனா தொற்றுநோய் ஆண்டுகளைத் தவிர்த்துக் கணக்கிட்டால் கடந்த 20 ஆண்டுகளில் மிகக் குறைவான அளவீடாகும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற நுகர்வு இரண்டிலுமே 2023 நிதியாண்டில் தனிநபர் நுகர்வு குறைந்து காணப்படுகிறது.
அண்மைக்காலமாக சில துறைசார் நுகர்வு தரவுகளும் நாட்டில் நிலவும் 20 ஆண்டு மோசமான நுகர்வு அளவின் பாதிப்புகளையும் எதிரொலித்துள்ளது. எடுத்துக்காட்டாக, ஜூன் மாதத்தில் இந்தியாவில் வாகன விற்பனை 2.5 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது. வாகன விற்பனை என்பது இந்தியாவில் தனியார் நுகர்வுக்கான ஒரு முக்கியமான இன்டிகேட்டராக கருதப்படுகிறது. அரசின் தரவுகளின்படி, நாட்டின் வாகனத் தொழில் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதம் பங்களிக்கிறது.
இதேபோல் உணவுப் பொருட்களின் பணவீக்கம் ரிசர்வ் வங்கி தொடர்ந்து கவலை தரும் விஷயமாக அறிவித்து வருகிறது. இதனால் மத்திய அரசு நகர்வு அளவீட்டைச் சரி செய்ய நாட்டின் வருமான வரியில் குறைப்பை அறிவிக்கும், அல்லது அடுத்த ஆர்பிஐ கூட்டத்தில் ரெப்போ விகிதம் பெரிய அளவில் குறைக்க வழிவகுக்கப்படும்.


Click it and Unblock the Notifications