நாடு முழுவதும் இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் கடைசி நேரத்தில் விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் எதிர்கொண்ட சிரமங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சூழலில், மாற்று விமான நிறுவனங்கள் விதித்த மிக அதிக கட்டணங்கள் பொதுமக்களின் கோபத்தை அதிகரித்துள்ளது.
விண்ணை முட்டிய விமான டிக்கெட் விலை : சமீபத்தில், இண்டிகோ விமான ரத்தால் பாதிக்கப்பட்ட பயணி Pops KV Sridhar என்பவர் தனது அனுபவத்தை லிங்க்ட்இன் தளத்தில் பகிர்ந்துள்ளார். சென்னை (MAA) யில் இருந்து மும்பை (MUM) செல்லவிருந்த இண்டிகோ விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால், மாற்று வழிகளைத் தேட வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.

அவர் உடனடியாக மாற்று விமானங்களை தேடியபோது, ஏர் இந்தியா மட்டுமே ஒரே மாற்று வழியாக இருந்தது. ஆனால், முந்தைய இரவு ஒரு விமானம் கூட அவருக்கு கிடைக்கவில்லை. அடுத்த நாள் காலை, அவர் கண்டுபிடித்த ஒரே ஒரு பயண சீட்டின் விலை ரூ.34,231 ஆகும். அன்றைய தினத்தில் மற்ற அனைத்து விமான சீட்டுகளின் விலையும் ரூ.45,000-க்கு மேல் விற்கப்பட்டது.
இதைவிட அதிர்ச்சியான செய்தி என்னவென்றால், அவர் ஒரு வழித்தட வணிக வகுப்பு (Business Class) இருக்கையைக் கேட்டு விசாரித்தபோது, அதற்கான கட்டணம் ரூ.1,16,000 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சாதாரண நேரத்தில் சில ஆயிரங்களில் இருக்கும் டிக்கெட் கட்டணம், ஒரு லட்சத்தை தாண்டியதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
முன்கூட்டியே ஏன் தகவல் இல்லை..?: இந்த இக்கட்டான சூழ்நிலையில், பயணிகளுக்கு முன்னதாகவே விமான ரத்து குறித்த தகவலை இண்டிகோ நிறுவனம் தெரிவிக்காததது மிகப் பெரிய தவறு என்று அந்தப் பயணி சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், அவசரமாக அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல, விமானச் சேவை முடக்கம் போன்ற அசாதாரண சூழ்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் கட்டணங்களை மிக அதிகமாக உயர்த்தி, 'சர்ஜ் பிரைசிங்' (Surge Pricing) விதித்ததையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இண்டிகோ விமான நிறுவனம் முன்கூட்டியே தகவல் தராதது, ஏர் இந்தியா அதிகக் கட்டணம் வசூலித்தது என இரண்டு நிறுவனங்களின் நற்பெயரும் இந்தச் சம்பவத்தால் குறைந்துள்ளது. மேலும், இவ்வளவு பெரிய குழப்பம் நடந்தும், விமானப் போக்குவரத்து அமைச்சகம் வேடிக்கை மட்டுமே பார்த்ததாகவும் அவர் தனது கோபத்தை பதிவு செய்துள்ளார்.
இண்டிகோ விமானங்களின் ரத்து மற்றும் தாமதம், பயணிகளுக்கு நேர விரயம், அலைச்சல் மற்றும் மிகப் பெரிய பொருளாதார சுமையை ஏற்படுத்தியுள்ளன. விமானச் சேவைகள் முடங்கும் இந்த சமயத்தில், மாற்று விமானங்களின் கட்டண உயர்வைக் கட்டுப்படுத்தவும், பயணிகளுக்கு உரிய நேரத்தில் தகவல் அளிக்கவும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை உடனடியாக தலையிட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications