இந்தியாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான இண்டிகோவில் தொடர்ந்து 2வது நாளாக அதிக எண்ணிக்கையிலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி வியாழக்கிழமை பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் மட்டும் சுமார் 73 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதேபோல் ஹைதராபாத் விமான நிலையத்தில் மொத்தமாக 68க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதவிர டெல்லி (20 விமானங்கள் ரத்து), கொல்கத்தா விமான நிலையத்திலும் இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் நாடு முழுவதும் 170க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்தாகி ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.

இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தின்படி, கடந்த இரு நாட்களாக பல்வேறு பிரச்சனைகள் ஒரே நேரத்தில் ஏற்பட்டதே இந்தக் குழப்பத்திற்குக் காரணம். தொழில்நுட்பக் கோளாறு, மோசமான வானிலை, விமான நிலையங்களில் அதிக நெரிசல், நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வந்த புதிய பைலட் பணி நேர விதிமுறைகள் ஆகியவை ஒன்றோடொன்று பிரச்சனையாக மாறி இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. இதோடு கடந்த வார இறுதியில் ஏர்பஸ் ஏ320 ரக விமானங்களுக்கு அவசர சாப்ட்வேர் அப்டேட் செய்யப்பட்டதும் இப்பிரச்சனையை தீவிரமாக்கியுள்ளது.
இண்டிகோ நிறுவனம் தற்போது பெரும் பைலட் மற்றும் ஊழியர் பற்றாக்குறை பிரச்சனையும் எதிர்கொண்டுள்ளது. இதனால் குறித்த விமானத்தை குறித்த நேரத்தில் முழுமையாக இயக்க முடியாத நிலையில் மாட்டிக்கொண்டு உள்ளது.
இந்த பிரச்சனைகளை களைய வேண்டும் என்பதற்காக அடுத்த 48 மணி நேரத்திற்கு சில விமானங்களை இண்டிகோ விமான நிறுவனத்தால் திட்டமிட்டே சேவை எண்ணிக்கை குறைத்து, படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்ப நிறுவனம் முயற்சி செய்வதாக அறிவித்துள்ளது. ஆனால் இந்தத் திடீர் விமான ரத்துகள் பயணிகளை பெரிதும் பாதித்துள்ளன. பலர் மணிக்கணக்கில் விமான நிலையங்களில் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இந்தத் தொடர் இடையூறுகளால் இண்டிகோ நிறுவனத்தின் தாய் நிறுவனமான இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனத்தின் பங்கு விலை வியாழக்கிழமை காலையில் 3.4 சதவீதம் சரிந்தது தேசிய பங்குச் சந்தையில் ஒரு பங்கின் விலை 5,405 ரூபாய் வரை குறைந்தது. இது முதலீட்டாளர்களிடையேயும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
விமானம் ரத்து செய்யப்பட்ட பயணிகளுக்கு முழு தொகை திரும்பப் பெறலாம் அல்லது அடுத்த கிடைக்கும் விமானத்தில் இலவசமாக மாற்றிக்கொள்ளலாம் என்று இண்டிகோ அறிவித்துள்ளது. ஆனால் பண்டிகை காலம் நெருங்குவதால் மாற்று விமானங்கள் உடனடியாக கிடைப்பது கடினமாக உள்ளது.


Click it and Unblock the Notifications