இண்டிகோ விமானச் சேவையில் ஏற்பட்ட கடும் பாதிப்புகளைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட தனது பயணிகளுக்கு ரூ. 10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை வழங்குவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. விமானம் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான பயணிகளுக்கு ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரை இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான டிக்கெட் கட்டணத்தை திருப்பிச் செலுத்துவது தொடங்கப்பட்டு, பெரும்பாலானவர்களுக்கு டிக்கெட் கட்டணம் ரீஃபண்டு செய்யப்பட்டது என கூறியுள்ளது. பல நாட்கள் நீடித்த விமான சேவைகள் சீரடைந்து இருப்பதாகவும் சேவை திரும்பியிருப்பதாகவும் இண்டிகோ தெரிவித்துள்ளது.

விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், கடுமையாகப் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ. 10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்கள் கிடைக்கும். மேலும், புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்யப்பட்ட விமானங்களின் பயணிகளுக்கு ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரை இழப்பீடும் வழங்கப்படும். இந்தப் பயண வவுச்சர்களை அடுத்த 12 மாதங்களுக்குள் இண்டிகோவின் எந்தவொரு எதிர்காலப் பயணத்திற்கும் பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.
இண்டிகோவால் வெளியிடப்பட்ட அறிக்கையில், ரத்து செய்யப்பட்ட அனைத்து விமானங்களுக்கான டிக்கெட் கட்டணமும் ரீஃபண்டு செய்யும் பணி பெரும்பாலும் முடிந்துவிட்டதாக கூறியுள்ளது. பயண முகவர்கள் மூலம் டிக்கெட் பதிவு செய்தவர்களுக்கும் ரீஃபண்டு தொடங்கப்பட்டுள்ளன. "டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் பயணம் செய்த எங்கள் வாடிக்கையாளர்களில் சிலர் பல மணிநேரம் விமான நிலையங்களில் சிக்கித் தவித்ததையும், கூட்டம் காரணமாக பலர் கடுமையாகப் பாதிக்கப்பட்டதையும் இண்டிகோ வருத்தத்துடன் ஒப்புக்கொள்கிறது" என்று அந்த அறிக்கையில் விமான நிறுவனம் குறிப்பிட்டது.
இந்தியாவின் மிகப் பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, புதன்கிழமை அன்று சுமார் 220 விமானங்களை ரத்து செய்தது. . டிசம்பர் 2 அன்று தொடங்கிய இந்த விமானச் சேவைக் குழப்பம் கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு நீடித்தது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பல மணிநேரம் விமான நிலையங்களில் சிக்கித் தவித்தனர்.
முன்னதாக விமானச் சேவைத் துறை கண்காணிப்பு அமைப்பான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பீட்டர் எல்பெர்ஸ் மற்றும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு அழைப்பாணை அனுப்பியது. விமானச் சேவையை மீட்டெடுப்பதற்கான நிலை, புதிதாக விமானிகளை எடுப்பதற்கான திட்டங்கள், பணத் திருப்பிச் செலுத்தும் செயல்முறை, உடைமைகள் திரும்பப் பெறுதல், பயனுள்ள தகவல் தொடர்பு மற்றும் கட்டணக் கொள்கை குறித்த பல்வேறு புதுப்பிப்புகளை அதிகாரிகளிடமிருந்து DGCA கோரியுள்ளது.
விமான போக்குவரத்து இயக்குனரகம் விமான பணிநேர வரம்பு விதிகளை கொண்டு வந்துள்ளது. விமானிகளின் சோர்வை குறைத்து பயண பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன . இதன்படி விமானிகள் மற்றும் விமான பணியாளர்களின் வாராந்திர ஓய்வு நேரம் 36 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரவு நேர விமான செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் இரவு பயணங்களிம் எண்ணிக்கையும் ஒரு சுழற்சிக்கு ஆறு என்பதிலிருந்து இரண்டு என குறைக்கப்பட்டிருக்கிறது.
இந்த விதிமுறைகளை அனைத்து விமான நிறுவனங்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என டிஜிசிஏ அறிவித்துவிட்டது . இதற்கு உரிய கால அவகாசமும் வழங்கப்பட்டது. ஆனால் இண்டிகோ நிறுவனத்தின் செயல்பாட்டு மாதிரி , விமான பயன்பாட்டு அளவு மற்ற நிறுவனங்களை விட அதிகமாக இருப்பதால் இந்த விதிமுறைகளை சரிவர அமல்படுத்த முடியாமல் நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்யும் நிலைக்கு சென்றது.


Click it and Unblock the Notifications