இந்தியாவில், விமானத்தில் பயணிப்பது என்பது தற்போது சர்வசாதாரணமான விஷயமாக மாறிவிட்டது, குறிப்பாகப் பெரு நகரங்கள் மற்றும் சிறு நகரங்களுக்கு மத்தியிலான சேவை அதிகரிக்கப்பட்டு இருக்கும் இந்த வேளையில் தொழிற்துறையினர் மட்டும் அல்லாமல் தற்போது சாமானிய மக்களும் அதிகளவில் விமானத்தில் பயணம் செய்யத் துவங்கியுள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான IndiGo டிசம்பர் 18ஆம் தேதி தனது வரலாற்று சாதனை குறித்து முக்கிய அறிக்கையை வெளியிட்டது. இந்தியாவின் முதல் விமான நிறுவனமான இண்டிகோ, ஒரே காலண்டர் ஆண்டில் சுமார் 100 மில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்று வரலாற்று சாதனையைப் படைத்துள்ளதாக அறிவித்தது.

2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 18 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் 100 மில்லியன் அதாவது 10 கோடி பயணிகளுக்கு விமான சேவை அளித்துள்ளது இண்டிகோ. இத்தகையைச் சாதனையை இதுவரையில் எந்தொரு நிறுவனமும் இந்தியாவில் பதிவு செய்திடாத நிலையில் இண்டிகோ புதிய பென்ச்மார்க்கை செட் செய்துள்ளது.
இந்திய மக்களின் விருப்பமான விமான நிறுவனமாக இருக்கும் இண்டிகோ, இந்தக் காலண்டர் ஆண்டில் 100 மில்லியன் பயணிகளை ஏற்றிச் செல்லும் முதல் இந்திய விமான நிறுவனம் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. இந்தச் சாதனை மூலம், உலகளாவிய டாப் விமான சேவை நிறுவனங்கள் கிளப்பில் இணைந்துள்ளது.
விமானப் பயணிகள் போக்குவரத்தில் உலகின் 10 பெரிய விமான நிறுவனங்களில் இண்டிகோவின் நிலைப்பாட்டை இந்தச் சாதனை உறுதிப்படுத்துகிறது என்று இண்டிகோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இண்டிகோ-வின் மிகப்பெரிய வர்த்தகம் உள்நாட்டு விமானச் சேவையில் தான், ஆனால் நீண்ட கால வளர்ச்சிக்கும் அதிகப்படியான வருமானம் மற்றும் லாபத்தை அடைய 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 20 வெளிநாட்டு வழித்தடத்தில் கூடுதலாகத் தனது சேவை பட்டியலில் சேர்த்துள்ளது.
நவம்பர் மாத தரவுகள் படி இந்திய விமான போக்குவரத்து சந்தையில் சுமார் 61.8 சதவீத சந்தையை இண்டிகோ வைத்துள்ளது. இது ஏர் இந்தியாவின் வர்த்தகத்தை ஒப்பிடும்போது 6 மடங்கு அதிகமாகும். இதேவேளையில் ஜனவரி மாதம் இண்டிகோ-வின் பங்கீடு குறைய உள்ளது, இதற்கு முக்கியமான காரணம் 40க்கும் அதிகமான விமானங்கள், பழுது மற்றும் சர்வீசஸ் செய்யத் தரையிறக்கப்பட்டு உள்ளது.
இந்திய விமான போக்குவரத்து சந்தையில் இண்டிகோவுக்கு இணையாக வளர்ச்சி அடைய வேண்டும் என்ற ஒற்றை இலக்கில் தான் ஏர் இந்தியா 500 புதிய விமானங்களுக்கு ஆர்டர் செய்தது. ஆனால் போட்டிக்கு இண்டிகோ-வும் வந்துள்ளதால் போட்டி தீவிரம் அடைந்துள்ளது. எல்லாம் சரி ஏர் இந்தியா எப்போது 10 கோடி பயணிகள் அளவீட்டை அடையும்..?


Click it and Unblock the Notifications