இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோவில் ஊழியர்கள் பற்றாக்குறையால் ஏற்பட்ட குழப்பம் 4-வது நாளாக தொடர்கிறது. விமானப் போக்குவரத்துத் துறை இந்தச் சிக்கலை கட்டுப்படுத்த முடியாததால், இண்டிகோவால் வெள்ளிக்கிழமை மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கானப் பயணிகள் பாதிக்கப்பட்டு, விமான நிலையங்களில் கடும் குழப்பம் நீடிக்கிறது.
விதியை தளர்த்திய DGCA : இண்டிகோ தனது விமான சேவைகளை சீரமைக்க உதவும் வகையில், விமானக் குழுவினரின் பணி நேர விதிகளை (Flight Duty Norms) விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் தளர்த்தியுள்ளது. இந்த விதிகள்தான் விமான ஊழியர்களின் ஓய்வு நேரத்தை அதிகரிப்பதற்கும், பாதுகாப்பு உறுதி செய்வதற்கும் கொண்டு வரப்பட்டன.

விமான நிறுவனம் அரசு மீது அழுத்தம் கொடுத்ததாலேயே இந்த விதிகள் தளர்த்தப்பட்டன என்று பலர் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பத்திரிகையாளர்களும், அரசியல் தலைவர்களும் கூட, நீண்ட நேரம் விமானம் ஓட்டிய பிறகு குழுவினருக்கு சரியான ஓய்வு கிடைப்பதை உறுதி செய்யாமல் விதியை தளர்த்துவது பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று தெரிவித்துள்ளனர்.
வைரல் வீடியோ : இண்டிகோ விவகாரம் தொடர்பான இந்த விவாதத்தின் மத்தியில், சமூக ஊடகங்களில் ஒரு பழைய ரஷ்ய காணொலி வைரலாகி வருகிறது. கடந்த 2009-ஆம் ஆண்டு ரஷ்யாவின் பிகல்யோவோ நகரில், ஒரு தொழிற்சாலை ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் நெருக்கடி ஏற்படுத்தியபோது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அங்கு சென்றார்.
புதின், அந்த தொழிற்சாலையின் உரிமையாளரான பெரும் பணக்காரர் ஒலெக் டெரிபாஸ்காவை பொதுவெளியில் நேரடியாகச் சந்தித்தார். புதின் டெரிபாஸ்காவை நோக்கி, "உங்களின் பேராசை மற்றும் தொழில்முறை குறைபாட்டால் ஆயிரக்கணக்கான மக்களை பணய கைதிகளாக ஆக்கிவிட்டீர்கள். ஒரு தொழிலுக்குச் சமூகப் பொறுப்பு எங்கே போனது?" என்று கடுமையாக சாடினார்.
உடனடியாக தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட புதின் அவரை வற்புறுத்தினார். டெரிபாஸ்கா கையெழுத்திட்டுவிட்டுப் போகும்போது, "என் பேனாவை திரும்பக் கொடுங்கள்" என்று புதின் கூறியது பெரும் பரபரப்பானது. "பெரிய பணக்காரர்கள் அரசை சவாரி செய்ய முடியாது" என்ற செய்தியை இந்தக் காணொலி அழுத்தமாக உணர்த்தியதாக இணையவாசிகள் கருத்துத் தெரிவித்தனர்.
இண்டிகோவின் செயல்பாட்டுக் குழப்பங்கள் மற்றும் பாதுகாப்பு விதி தளர்த்தல் ஆகியவை குறித்துப் பொதுமக்கள் மத்தியில் கோபம் அதிகரித்துள்ள நிலையில், புதினின் இந்த காணொலியைப் பலரும் பகிர்ந்து, "அரசு ஒரு நிறுவனத்தை கையாளும் விதம் எப்படி இருக்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் குழப்பத்துடன் காத்திருக்கும் பின்னணியில், கார்ப்பரேட் அழுத்தம், அரசின் நடவடிக்கை மற்றும் பொது நலன் ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலையை இப்போது அனைவரும் கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications