இந்தியாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான இண்டிகோ 500க்கும் அதிகமான விமான சேவைகளை ரத்து செய்துள்ளது . இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் லட்சக்கணக்கான பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி இருக்கின்றனர் .
டெல்லி, சென்னை ,மும்பை ,பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்களில் எல்லாம் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் அனைவரும் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நிற்கின்றனர் . எங்கு பார்த்தாலும் பயணிகள் காத்திருப்பதும் , தாங்கள் நினைத்த ஊருக்கு உரிய நேரத்தில் செல்ல முடியுமா என்ற தவிப்புடன் இருப்பதையும் பார்க்க முடிகிறது .

இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை பாதிப்பு நாடு முழுவதும் பெரும் பிரச்சனையாக எழுந்துள்ளது. விமான நிலையங்களில் காத்திருக்கக்கூடிய பயணிகள் பல மணி நேரம் காத்திருப்பதாகவும், தங்களுக்கு எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை விமான நிலைய நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை என கூறியிருக்கின்றனர். பெங்களூரு, மும்பை, சென்னை , ஐதராபாத், டெல்லி என நாட்டின் மேஜர் விமான நிலையங்கள் அனைத்தும் ஸ்தம்பித்து போயுள்ளன.
விமான போக்குவரத்து இயக்குனரகம் விமான பணிநேர வரம்பு விதிகளை கொண்டு வந்துள்ளது. விமானிகளின் சோர்வை குறைத்து பயண பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன . இதன்படி விமானிகள் மற்றும் விமான பணியாளர்களின் வாராந்திர ஓய்வு நேரம் 36 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரவு நேர விமான செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் இரவு பயணங்களிம் எண்ணிக்கையும் ஒரு சுழற்சிக்கு ஆறு என்பதிலிருந்து இரண்டு என குறைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இரவு நேரம் என வரையறுக்கப்பட்ட கால அளவையும் நீட்டித்துள்ளது. இந்த விதிமுறைகளை அனைத்து விமான நிறுவனங்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என டிஜிசிஏ அறிவித்துவிட்டது . இதற்கு உரிய கால அவகாசமும் வழங்கப்பட்டது. ஆனால் இண்டிகோ நிறுவனத்தின் செயல்பாட்டு மாதிரி , விமான பயன்பாட்டு அளவு மற்ற நிறுவனங்களை விட அதிகமாக இருப்பதால் இந்த விதிமுறைகளை சரிவர அமல்படுத்த முடியாமல் தற்போது பெரிய சிக்கலில் மாட்டியிருக்கிறது.

இந்தியாவில் ஏர் இந்தியா போன்ற மற்ற விமான சேவை நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இண்டிகோ அதிக எண்ணிக்கையிலான விமானங்களை இயக்குகிறது . இந்த புதிய விதிமுறைகளை செயல்படுத்த ஏதுவாக விமானிகளையும் பணியாளர்களையும் பணியில் அமர்த்தாமல் விட்டுவிட்டது. இதனால் விமானிகள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது . இதன் காரணமாக ஒட்டுமொத்தமாகவே விமான சேவைகளை ரத்து செய்யும் நிலைக்கு இண்டிகோ வந்துவிட்டது.
டிசம்பர் இரண்டாம் தேதி தொடங்கி இன்று வரை நாடு முழுவதுமே இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகள் ஸ்தம்பித்து போய் இருக்கின்றன. விமானிகள் மற்றும் பணியாளர்கள் சங்கங்கள் ,இண்டிகா நிறுவனம் புதிய விதிகள் வரப்போவது தெரிந்திருந்தும் அதற்கு ஏற்ப கூடுதல் பணியாளர்களை சரியான நேரத்தில் நியமிக்காமல் தவறிழைத்ததே இந்த நிலைக்கு காரணம் என தெரிவித்திருக்கின்றனர். மற்றொருபுறம் இண்டிகோ நிறுவனத்திற்கு ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளும் விமானங்கள் தாமதமாவதற்கும் ரத்தாவதற்கும் பெரிய காரணமாக அமைந்திருக்கின்றன.
பயணிகளின் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இருந்தாலும் இந்த மன்னிப்பு போதுமா என்பதுதான் பயணிகள் கேட்கும் கேள்வி. இதற்கிடையே இண்டிகோ விமானத்தின் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக விமான போக்குவரத்து ஆணையம் தன்னுடைய விதிகளில் சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. ஐந்தாண்டு காலம் ஒப்பந்த முறையில் டிஜிசிஏ விமானிகளை பணியில் அமர்த்தும். இவர்கள் ஆய்வாளர்களாக செயல்படுவார்கள். இந்த 5 ஆண்டு காலத்தில் விமானங்களை இயக்குவதற்கு இவர்களுக்கு தடை உள்ளது.
தற்போது இண்டிகோ நிறுவனத்தின் இந்த சூழலை சரி செய்வதற்காக டிஜிசிஏ தங்களின் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட ஆய்வாளர்களை விமானங்களை இயக்க அனுமதி தந்திருக்கிறது . மேலும் விமானங்களுக்கான வாராந்திர ஓய்வு நேரத்தையும் மாற்றி அமைத்திருக்கிறது . இதன் மூலம் ஓரளவு நிலைமை சீராகலாம் என கணிக்கப்படுகிறது.இண்டிகோ நிறுவனம் டிஜிசிஏ விதிகளை முறையாக அமல்படுத்த கால அவகாசம் கேட்டுள்ளது. பிப்ரவரிக்குள் ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து புதிய விதிமுறைகளை அமல்படுத்துவோம் என உறுதி தந்துள்ளது.


Click it and Unblock the Notifications