உலகளவில் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து வரும் நிலையில், அதன் தாக்கம் இந்திய விமானப் போக்குவரத்து துறையில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ சிஇஓ சமீபத்தில் ராஜினாமா செய்வதாக அறிவித்த நிலையில், தற்போது எரிபொருள் செலவுகளை சமாளிக்க புதிய முடிவை எடுத்துள்ளது.
இதன் படி இண்டிகோ நிறுவனத்தின் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் பயணங்களுக்கு புதிதாக எரிபொருள் கூடுதல் கட்டணத்தை (Fuel Surcharge) அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த கூடுதல் கட்டணம் மார்ச் 14 முதல் அனைத்து புதிய விமான டிக்கெட் முன்பதிவுகளுக்கும் அமலுக்கு வரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் WTI கச்சா எண்ணெய் விலை 96 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 101.7 டாலராக உள்ளது.

மத்திய கிழக்கு போர்
மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்துள்ள போர் பதற்றம் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை தடாலடியாக உயர்ந்து வருகிறது. இந்த நிலை விமானத் துறையில் பயன்படுத்தப்படும் விமான எரிபொருள் விலையையும் உயர்த்தியுள்ளது.
விமான நிறுவனங்கள் பெரிதும் பயன்படுத்தும் Aviation Turbine Fuel (ATF) விமான சேவைகளின் முக்கிய மற்றும் பெரும் செலவாகும். எரிபொருள் விலை அதிகரிப்பதால் விமான நிறுவனங்களின் மொத்த செலவும் கணிசமாக உயர்ந்துள்ளது.
IATA தரவுகள்
சர்வதேச விமான போக்குவரத்து சங்கமான IATA வெளியிட்டுள்ள Jet Fuel Monitor தரவுகளின்படி, விமான எரிபொருள் விலை 85%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த திடீர் உயர்வு விமான நிறுவனங்களின் செயல்பாட்டு செலவுகளை பெரிதும் பாதித்துள்ளதாக IndiGo நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான டிக்கெட் கட்டணத்தில் எவ்வளவு உயர்வு?
IndiGo வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, புதிய எரிபொருள் கூடுதல் கட்டணம் பயண தூரத்தைப் பொறுத்து விதிக்கப்படும். இந்தியா மற்றும் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கான விமானப் பயணங்களுக்கு 425 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் விமானங்களுக்கு 900 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். தென்கிழக்கு ஆசியா, சீனா, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியா பகுதிகளுக்கான விமானங்களில் 1,800 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
ஐரோப்பாவிற்குச் செல்லும் விமானப் பயணங்களுக்கு அதிகபட்சமாக 2,300 ரூபாய் வரை எரிபொருள் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
Air India எடுத்த முடிவு
சில நாட்களுக்கு முன்பே Air India குழுமம் விமான டிக்கெட்டுகளில் எரிபொருள் கூடுதல் கட்டணம் விதிப்பதாக அறிவித்திருந்தது. அதன் பின்னர் தற்போது IndiGo நிறுவனமும் இதேபோன்ற முடிவை எடுத்துள்ளது.
எரிபொருள் விலை மிக அதிகமாக உயர்ந்தாலும், பயணிகளுக்கு அதிக சுமை ஏற்படாத வகையில் குறைந்த அளவிலேயே இந்த கூடுதல் கட்டணத்தை நிர்ணயித்துள்ளதாக IndiGo நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.
விமான சேவையில் மிகப்பெரிய செலவு என்றால் இது விமான எரிபொருள் தான், எண்ணெய் விலை உயர்வு அனைத்து விமான நிறுவனங்களின் செயல்பாடுகளையும் நேரடியாக பாதித்து வருகிறது. இந்த நிலையில் வளைகுடா பகுதியில் நுழைய முடியாத காரணத்தால் அனைத்து விமானங்களை பல ஆயிரம் கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருப்பதால் கூடுதல் எரிபொருள், நேரம் செலவாகிறது.


Click it and Unblock the Notifications