இந்தியாவின் முன்னணி விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ-வின் இடத்தை ஏர் இந்தியா பிடிக்க முயற்சி செய்து இதேவேளையில், இண்டிகோ யாரும் எதிர்பாராத வகையில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்தியாவில் உள்நாட்டு விமானச் சேவை பயன்பாடு மக்கள் மத்தியில் பெரிய அளவில் அதிகரித்துள்ள வேளையில், இதில் கிங்மேக்கராக இருக்கும் இண்டிகோ தற்போது உலகளவில் கிங்மேக்கராக மாறியுள்ளது. எப்படித் தெரியுமா..?
இந்தியப் பங்குச்சந்தை தற்போது மோசமான நிலையில் இருந்தாலும், கடந்த சில மாதங்களாகப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட தொடர்ச்சியான மற்றும் வலுவான ஏற்றத்தின் காரணமாக, குறுகிய காலத்திற்கு உலகின் மதிப்புமிக்க விமான நிறுவனமாக இண்டிகோ உயர்ந்து புதிய சாதனையைப் பிடித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் இண்டிகோ நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாயை எட்டியது. இது அமெரிக்க டாலரில் சுமார் 23.3 பில்லியன் டாலர்களுக்குச் சமமாகும். இதன் மூலம், உலகளவில் முதல் இடத்தில் இருக்கும் டெல்டா ஏர் லைன்ஸ் மற்றும் ரைன் ஏர் ஹோல்டிங்ஸ் போன்ற உலகளாவிய விமானப் போக்குவரத்து ஜாம்பவான்களின் சந்தை மதிப்பையும் இண்டிகோ தாண்டிச் சென்றுள்ளது.
இன்று பங்குச்சந்தை விடுமுறை என்பதால் ஏப்ரல் 9ஆம் தேதி வர்த்தகத்தில் 0.68 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கு விலை 5189.40 ரூபாயாகவும், இதன் மூலம் மொத்த சந்தை மதிப்பு 2,00,530.54 ரூபாயாக உள்ளது. இன்றைய நிலவரப்படி டெல்டா ஏர்லைன்ஸ் 2.463 லட்சம் கோடி ரூபாய், ரைன் ஏர் 2.010 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
2025 ஆம் ஆண்டு இதுவரை இண்டிகோவின் பங்குகள் 13% வரை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை அளித்துள்ளன. ஆனால் இதே காலகட்டத்தில் இந்தியப் பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான நிஃப்டி சுமார் 6% சரிவைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் தற்போது ஏர் இந்தியா இண்டிகோ-வின் உள்நாட்டு விமானச் சேவை வர்த்தகத்தையும், இண்டிகோ ஏர் இந்தியாவின் வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவையைக் கைப்பற்றும் போட்டியில் உள்ளது. இதேபோல் உள்நாட்டு விமானச் சேவையில் பல புதிய மற்றும் சிறிய நிறுவனங்கள் வந்தாலும் 98 சதவீத வர்த்தகத்தை ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் ஆகியவை மற்றுமே பெற்று வருகிறது. இதில் 62% பங்கீட்டை இண்டிகோ கொண்டுள்ளது.
தற்போது இண்டிகோ 439 விமானங்களைக் கொண்டுள்ளது, இதில் 50 விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 2026 நிதியாண்டில் சுமார் 50 புதிய விமானங்களைச் சேர்க்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் கைப்பற்றுவதற்கு முன்பு வரையில் இண்டிகோ இந்திய விமானச் சேவையில் பெரும் ஆதிக்கத்தைக் கொண்டு இருந்தது. ஆனால் ஏர் இந்தியா டாடா குழுமத்தின் கைக்கு வந்த பின்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் இண்டிகோ உள்நாட்டுச் சேவையில் கடுமையான பேட்டியை எதிர்கொண்டு வருகிறது.
இதேபோல் இண்டிகோ இதுநாள் வரையில் உள்நாட்டில் மட்டுமே விமான சேவை அளித்து வந்தது, ஆனால் சமீபத்தில் வெளிநாட்டு விமானச் சேவைகளை அதிகரித்து புதிய வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களையும் பெற்று வருகிறது. அடுத்த 5 - 10 வருடத்தில் இண்டிகோ-வின் வருவாய் பங்கீட்டில் வெளிநாட்டுச் சேவை தான் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications