மும்பை: சர்வதேச பயணங்களை மேற்கொள்ள விமான டிக்கெட்டுகளை பதிவு செய்ய, அதற்காக நாம் அதிக தொகை கொடுத்து பதிவு செய்ய வேண்டியிருக்கும். இந்த கட்டணமானது ஒவ்வொருவரும் பயணிக்கும் நாடுகளை பொறுத்து மாறுபடும். ஆனாலும் சர்வதேச பயணம் செய்ய நாம் அதிக தொகையை கொடுக்க வேண்டியிருக்கும்.
அப்படி நாம் அதிக செலவு செய்து பதிவு செய்த டிக்கெட்டுகளை கேன்சல் செய்யும் போது அதற்கும் ஒரு கட்டணம் விதிக்கப்படும். அதையே உங்களுக்கு தகுந்த மற்ற நாட்களில் மாற்றம் செய்தால், அதற்கு தகுந்தாற்போல் வேறுபடும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
அதிலும் தற்போது உலகம் முழுவதிலும் பரவி வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில், பலரும் தங்களது விமான பயணங்களை ரத்து செய்யவே விரும்புகின்றனர். இந்த சமயத்தில் இவர்களுக்கெல்லாம் பயன்படும் விதமாக இண்டிகோ ஒரு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.
Rescheduling கட்டணம்
ஏன் சில நாடுகள் விமான பயணத்தையே கூட ரத்து செய்துள்ளன. இந்த நிலையில் வாடிக்கையாளரும் கஷ்டப்படாமல், நிறுவனமும் நஷ்டம் அடையாமல் இருக்க இண்டிகோ ஒரு அதிரடியான சலுகையை அறிவித்துள்ளது. அது மார்ச் 31 வரையில் மறுசீரமைத்தல் கட்டணத்தை (rescheduling) தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. அதாவது பயணத்தை பிற்கால தேதிக்கு மாற்றியமைக்கும்போது பயணிகள் கட்டண வேறுபாட்டை செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் இண்டிகோவின் இந்த சலுகையினால் அதிக வேறுபாடு கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்காது.
டிக்கெட் ரத்து கட்டணம் உண்டு
இது ஏற்கனவே பதிவு செய்த விமான டிக்கெட்களுக்கும் சரி, மார்ச் 12 முதல் மார்ச் 31 வரையில் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கும் பதிவு செய்யும் விமான டிக்கெட்டுகளுக்கும் பொருந்தும் என்றும் இண்டிகோ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும் டிக்கெட் ரத்து கட்டணம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கவலையை போக்க திட்டம்
தற்போது நிலவி வரும் கொரோவைரஸ் பயத்தினால் பல பயணிகள் பயணத்தில் ஈடுபடுவதில் கவலை கொண்டுள்ளனர் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆக அவர்களின் கவலையை போக்கும் விதமாகவும், அவர்களின் பயணம் தொந்தரவில்லாமல் செய்யவும், இந்த மாற்றுக் கட்டணத்தை தள்ளுபடி செய்கிறோம் என்றும் இண்டிகோவின் வணிக அதிகாரி வில்லியம் போல்டர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நல்ல திட்டம் தான்
மேலும் பயணிகள் பயணத்தை மறுசீரமைக்க (rescheduling) மூன்று நாட்களுக்கு முன்பே விமான நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. எப்படி இருப்பினும் இந்த சலுகையானது டிக்கெட்டை ரத்து செய்யாமல் மற்றொரு நாள் பயணம் செய்ய வழி வகுக்கும். அதேசமயம் வாடிக்கையாளரும் அதிகமாக கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்காது. ஆக இது நல்ல ஒரு திட்டமே.


Click it and Unblock the Notifications