இண்டஸ் இன்ட் வங்கியின் செயல்பாடுகளை மேற்பார்வையிடுவதற்கு ஒரு இடைக்கால குழுவை அமைக்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இண்டஸ் இன்ட் வங்கியின் பொறுப்புகளை கையாள ஒரு நிரந்தரமான தலைமை நிர்வாக அதிகாரி நியமனம் செய்யப்படும் வரை இந்த இடைக்கால குழு வங்கி செயல்பாடுகளை முழுமையாக மேற்பார்வையிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கியின் டெரிவேட்டிவ் கணக்குகளில் சில குறைபாடுகள் ஏற்பட்டதை தொடர்ந்து இண்டஸ் இன்ட் வங்கியின் நிகர மதிப்பு சரிவடைந்தது. இதனால் இண்டல் இன்ட் வங்கியில் முதலீடு செய்த முதலீட்டாளர்களும், அந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் பெரும் கவலை அடைந்தனர். இதனால் வங்கியின் பங்கு மதிப்பும் குறைய தொடங்கியது.

இந்த சூழலில் இண்டஸ் இன்ட் வங்கியின் மேலாண் இயக்குனரும் தலைமை செயல் அதிகாரிமான சுமந்த் கத்பாலியா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதனை அடுத்து வங்கிப் பணிகளை மேற்பார்வை இடுவதற்காக இடைக்கால குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் இந்திய பங்குச்சந்தை அமைப்பிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நுகர்வோர் பிரிவுக்கான தலைவராக இருக்கும் சௌமித்ரா சென், தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் அணில் ராம் ஆகியோர் அடங்கிய குழு இண்டஸ் இன்ட் வங்கியின் அன்றாட பணிகளை மேற்பார்வையிடும் என்றும் இவர்கள் தற்போது அமைக்கப்பட்டு இருக்கும் இடைக்கால குழுவிற்கு தங்களுடைய அறிக்கைகளை வழங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைக்கால மேற்பார்வை குழுவுக்கு வாரியத்தின் தலைவர் தலைமை தாங்குவார் என்றும் இந்த குழுவில் தணிக்கை குழு , இழப்பீடு மற்றும் நியமனம் மற்றும் ஊதியக்குழு ஆகிய குழுக்களின் தலைவர்களும் இடம்பெற்று இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலின் பெயரில் இந்த இடைக்கால மேற்பார்வை குழுவை அமைத்திருப்பதாக இன்டஸ் இன்ட் வங்கி தெரிவித்துள்ளது.
புதிதாக தலைமை செயல் அதிகாரி பொறுப்பேற்கும் வரை அல்லது மூன்று மாத காலம் இவற்றில் எது முதலில் நடக்கிறதோ அதுவரை இந்த இடைக்கால குழு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இண்டஸ் இன்ட் வங்கியின் துணை தலைமை செயல் அதிகாரி அருண் குரானாவும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த மார்ச் மாதம் இண்டல் இன்ட் வங்கியின் வாரியக் குழுவினர் ஒரு சுயாதீன தணிக்கை குழுவை நியமித்து வங்கி கணக்குகளை ஆய்வு செய்தனர். அப்போது டெரிவேட்டிவ் போர்ட்போலியோவை சரியாக கையாளாததால் வங்கியின் லாப கணக்கில் பல ஆயிரம் கோடி தாக்கம் ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து தான் தலைமை செயல் அதிகாரி , துணை தலைமை செயல் அதிகாரி ஆகியோர் பதவி விலகினர்.


Click it and Unblock the Notifications