மார்ச் மாதத்தில் இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி குறியீடு வெறும் 1.1 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது, இது பிப்ரவரி மாதம் 5.6% உயர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மார்ச் 2022 இல் 2.2 சதவீதம் மட்டுமே வளர்ந்திருந்தது.
இன்று தேசிய புள்ளியியல் அலுவலகம் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.70 சதவீதமாக குறைந்துள்ளது என அறிவித்த மகிழ்ச்சியுடன் இருக்கும் போது, தொழில்துறை உற்பத்தி குறியீடு யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைவான வளர்ச்சியை பதிவு செய்து முதலீட்டாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் மார்ச் மாத தரவுகள் வெளியான நிலையில் 2023 ஆம் நிதியாண்டில் மொத்தமாக 5.1 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. 2021-22 ஆம் நிதியாண்டில் 11.4 சதவீத வளர்ச்சி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தொழிற்சாலை உற்பத்தி அளவை தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் வாயிலாக அளவிடப்படுகிறது. தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட தரவுகள் படி, மார்ச் 2023 இல் உற்பத்தித் துறையின் உற்பத்திஅளவு 0.5 சதவீதம் அதிகரித்துள்ளது. சுரங்க உற்பத்தி அளவு 6.8 சதவீதம் அதிகரித்துள்ளது. மின் உற்பத்தி அளவு 1.6 சதவீதம் குறைந்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் CPI எனப்படும் நுகர்வோர் விலைக் குறியீடு 4.70 சதவீதம் வரையில் குறைந்துள்ளது மூலம், நாட்டின் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் நீண்ட கால முயற்சிகள் பலன் அளித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பணவீக்கத்தை 4- 6 சதவீதத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக தான் அடுத்தடுத்து ரெப்போ விகதத்தை உயர்த்தி வந்தது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் அப்பர் லிமிட் அளவான 6 சதவீதத்திற்கு கீழ் வந்துள்ளது இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இந்தியாவின் பணவீக்கம் தொடர்ந்து இரண்டாவது மாதமாக ரிசர்வ் வங்கியின் உச்ச வரம்பிற்குள் இருக்கிறது. மார்ச் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 5.66 சதவீதமாக இருந்தது. இதை தொடர்ந்து ஏப்ரல் மாதமும் 6 சதவீதத்திற்கு கீழ் 4.70 சதவீதமாக பதிவாகி 18 மாத சரிவை பதிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications