சில நாட்களாக எதை எடுத்தாலும் விலை உயர்வு தென்படுகிறது. அதிலும் குறிப்பாக பால் பொருட்கள் தொடங்கி பெட்ரோல், டீசல் வரையில் அனைத்தும் ஒரே நேரத்தில் உயர்ந்துள்ளதால், நடுத்தர வர்க்க குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட் மிகவும் மோசமாகியுள்ளது. வாங்கும் சம்பளத்திற்கு ஏற்ப பட்ஜெட் போட்டு வந்த காலம் மாறி, இன்று பொருட்களின் விலைக்கு ஏற்ப பட்ஜெட் போடத் தொடங்கியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் வரை மத்திய அரசு அதிகரித்தது. அதே நேரம் கேஸ் விலையும் கிலோவுக்கு 2 ரூபாய் அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக இப்போது அமுல் மற்றும் மதர் டைரி போன்ற முன்னணி பால் உற்பத்தியாளர்கள், லிட்டருக்கு 2 ரூபாய் வரை விலை உயர்வை அறிவித்துள்ளனர். இப்படி தொடர்ந்து விலை உயர்வு இருந்தால் வருகின்ற ஜூன் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 40 புள்ளிகள் வரை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் டைரக்டராக இருக்கும் மேகா அரோரா பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் பால் விலை உயர்வு இரண்டும் சேர்ந்து பணவீக்கத்தை 42 அடிப்படை புள்ளிகள் வரை அதிகரிக்கும் என்று கணித்துள்ளார். பெட்ரோல் விலையை விட பால் விலை உயர்வு தான் பணவீக்கத்தில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார். உண்மையிலேயே பால் பொருட்களை நம்பி பல நிறுவனங்கள் செயல்படுகிறது. உதாரணமாக அனைத்து டீக்கடைகள், ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகள் போன்றவற்றில் பால் தான் முதன்மையான மூலப் பொருளாக இருக்கிறது. அப்படி இருக்கையில் பாலின் விலை தொடர்ந்த அதிகரித்தால் அவர்களுடைய உற்பத்தி செலவும் அதிகரிக்கும். இதனால் பொதுமக்களுக்கும் செலவு அதிகரிக்கும்.

ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களுடைய மாதாந்திர பட்ஜெட்டில் சுமார் 7 சதவீதத்தை பாலுக்கும், 5.5 சதவீதத்தை எரிபொருளுக்கும் செலவிடுகின்றனர். அப்படி இருக்கையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வும் பணவீக்கத்தை 15 புள்ளிகள் வரை உயர்த்தும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இதன் தாக்கமும் மறைமுகமாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக இந்தியப் பொருளாதாரத்தில் பாஸ் த்ரூ எஃபெக்ட் என்ற ஒரு வார்த்தையை கூறுவார்கள். அதாவது ஏதேனும் ஒரு பொருள் விலை உயர்ந்தால் அதை சுற்றியுள்ள மற்றும் அதை சார்ந்திருக்கும் மற்ற விஷயங்களின் விலையும் தானாக உயரும். உதாரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்று வைத்துக் கொண்டால், அது போக்குவரத்து துறையை கடுமையாக பாதிக்கும். ஏற்றுமதி இறக்குமதியிலும் பிரச்சனையை ஏற்படுத்தும்.
ஒவ்வொரு பொருளும் வெவ்வேறு ஊர்களில் இருந்து நமக்கு வருகிறது. அரிசி பருப்பு, தக்காளி, வெங்காயம் இப்படி அனைத்தையும் ஏதோ ஒரு ஊரில் உற்பத்தி செய்து மற்ற ஊர்களுக்கு கொண்டு செல்கின்றனர். இப்படி இருக்கையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தால் கண்டிப்பாக அந்தந்த பொருட்களின் விலையும் அதிகரிக்கும். அப்போதுதான் கடைக்காரருக்கு லாபமும் கிடைத்து, அவர் போக்குவரத்துக்கு செய்த செலவும் சமன் செய்யப்படும்.
ஆன்லைன் டெலிவரி தளங்களும் தங்களுடைய கட்டணங்களை உயர்த்தும் வாய்ப்புள்ளது. பெட்ரோல் டீசல் உயர்ந்தால் டெலிவரி ஊழியர்களுக்கு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு உணவைக் கொண்டு செல்ல அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். இதை அந்த நிறுவனங்கள் கண்டிப்பாக வேறு வழியின்றி மக்களின் மேல் தான் வைக்கும். இதனால் டெலிவரி சார்ஜ் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பால் மற்றும் டீசல் விலை உயர்வு சங்கிலி தொடர் போல மற்ற தொழில்களையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை பார்த்தோம். பால் விலை உயர்வால் ஹோட்டல்கள் பெரிதும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. அதேபோல பெட்ரோல், டீசல் உயர்வால் போக்குவரத்து துறை கடுமையாக பாதிக்கும், இதனால் மளிகை பொருட்கள், காய்கறி ஆன்லைன் டெலிவரி சார்ஜ் என அனைத்து துறைகளிலும் கணிசமான விலையேற்றம் தென்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications