இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கு நவம்பர் 1 ஆம் தேதி முதல் சம்பள உயர்வு அளிப்பதாகச் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட போது அறிவித்தது. இதனால் இன்போசிஸ் ஊழியர்கள் அனைவரும் அக்டோபர் மாதத்தில் இருந்து சம்பள உயர்வுக்கான லெட்டரை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்..
ஆனால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இதேபோல் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்திலாவது வரும் என எதிர்பார்த்தவர்களுக்குத் தற்போது டிசம்பர் மாதம் சம்பள உயர்வுக்கான லெட்டரும், நவம்பர் மாதம் அரியர் சம்பளமும் கிடைக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை, நிறுவனத்தின் கூட்டத்தில் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஐடி ஊழியர்களை மகிழ்விக்கும் ஜூலை - செப்டம்பர் காலாண்டுக்கான வேரியபிள் பே தொகை ஒவ்வொரு ஊழியர்களுக்கும் எவ்வளவு கிடைக்கும் என்ற அறிவிப்புத் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் சம்பள உயர்வு தாமதம் குறித்த பிரச்சனை இன்போசிஸ் ஊழியர்கள் மத்தியில் தணிந்துள்ளதாகத் தெரிகிறது.
ஐடி துறையின் வர்த்தகம் மோசமாக இருக்கும் வேளையில் டிசிஎஸ் 3 முக்கியத் திட்டத்தை 2023ல் மட்டும் இழந்துள்ளது, இதனால் வருடத்திற்கு 440 மில்லியன் டாலர் அளவிலான வருவாய் இழப்பை எதிர்கொண்டு இருக்கிறது. ஆனால் இன்போசிஸ் பெரிய அளவிலான வர்த்தகத்தை இழக்காவிட்டாலும் புதிய வர்த்தகத்தை ஈர்ப்பதில் அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது.
இதனால் வேரியபிள் பே தொகையில் ஓட்டை விழுமா எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில், ஜூலை - செப்டம்பர் காலாண்டுக்கான வேரியபிள் பே தொகை சராசரியாக 80 சதவீதம் தனது ஊழியர்களுக்கு அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. இதேபோல் ஒவ்வொரு தனிநபரின் செயல்திறன் அடிப்படையிலும் இது மாறுபடும், பலருக்கு 85 -90 சதவீதம் வரையில் கூட வேரியபிள் பே கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இன்போசிஸ் மார்ச் காலாண்டுக்கு 60 சதவீதமும், ஜூன் காலாண்டுக்கு 70 சதவீதமும், செப்டம்பர் காலாண்டுக்கு 80 சதவீதம் எனத் தனது ஊழியர்களுக்கான வேரியபிள் பே தொகையை உயர்த்தி வருகிறது. இதன் மூலம் நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் வருமான சூழ்நிலைகளும் மேம்பட்டு உள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது.
மேலும் இந்த வேரியபிள் பே என்பது PL6 - மேனேஜர் அளவுக்குக் கீழ் இருக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே வழங்க கூடியது, மேலும் செப்டம்பர் காலாண்டுக்கான வேரியபிள் பே தொகையை நவம்பர் மாத சம்பளத்தில் கொடுக்கப்படும் என்பதை இன்போசிஸ் நிர்வாகம் அனைத்து ஊழியர்களுக்கும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications