பெங்களூரு: இந்தியாவின் இரண்டாவது பெரிய IT சேவை நிறுவனமான இன்போசிஸ், தனது ஊழியர்களுக்கு ஒவ்வொரு காலாண்டுக்கும் அளிக்கும் செயல்திறன் அடிப்படையிலான வேரியபிள்பே போனஸ் தொகையைக் கடந்த செப்டம்பர் காலாண்டுக்கு தற்போது அறிவித்துள்ளது. பொதுவாக இந்திய ஐடி சேவை நிறுவனத்தில் பணியாற்றும் ஐடி ஊழியர்களின் மொத்த சம்பளத்தில் ஒரு பகுதி வேரியபிள் பே ஆக கருதப்படும்.
இந்த தொகையை வருடத்தில் 4 காலாண்டுக்குப் பிரித்து, ஐடி ஊழியரின் செயல்திறன் அடிப்படையில் வழங்கப்படும், இதை பர்பாமென்ஸ் போன்ஸ் என்றும் அழைக்கப்படுவது உண்டு. நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிற்குத் தகுதியான மிட் லெவல் மற்றும் ஜூனியர் லெவல் ஊழியர்களுக்கு வேரியபிள் பே தொகையில் சராசரியாக 85% வழங்கப்படும் என இன்போசிஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதற்கான ஆணையை நேற்று இரவு முதல் வேரியபிள் பே தொகை பெற்ற ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டு வரும் வேளையில், இந்த தொகையை டிசம்பர் 1ஆம் தேதி சம்பளத்தில் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேவேளையில் மூத்த அதிகாரிகளுக்கு இந்த வேரியபிள் பே கட் செய்யப்பட்டு உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ஐடி நிறுவனங்கள் கடந்த 3 வருடத்தில் பல முறை இந்த வேரியபிள் பே தொகையை அளிக்காமல் ரத்து செய்திருந்த நிலையில் தற்போது இன்போசிஸ் போனஸ் கொடுத்துள்ளது மூலம் இக்காலாண்டில் வலுவான நிதி செயல்திறனைக் காட்டுகிறது.
செப்டம்பர் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் ரூ.6,506 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது நிதி சேவைகள் மற்றும் கிளவுட் சேவைகள் போன்ற முக்கிய பிரிவுகளில் வலுவான வளர்ச்சியால் லாபம் அதிகரித்துள்ளதாகக் கூறியிருந்தது. மேலும், இன்போசிஸ் தற்போதைய நிதியாண்டுக்கான வருவாய் அளவு 3.75-4.5% வரையில் உயரும் என கணித்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தில் JL0-JL2 வரையில் இருப்பவர்கள் பிரஷ்ஷர்ஸ் மற்றும் டெக்னிக்கல் லீடர்ஸ், JL3-JL6 வரையில் இருப்பவர்கள் நடுத்தர நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள், JL7 மற்றும் அதற்கு மேல் இருப்பவர்கள் அனைவரும் உயர்மட்ட அதிகாரிகள் ஆவார்கள்.
இந்த பதவி அடிப்படையில் தான் யாருக்கெல்லாம் வேரியபிள் பே அளிக்கப்படும் என்பதை இன்போசிஸ் நிர்வாகம் அறிவிக்கும். மேலும் இன்போசிஸ் -ன் சக போட்டி நிறுவனமான டிசிஎஸ் தனது ஊழியர்களுக்கு 50-60 சதவீத வேரியபிள் பே தொகையை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications