இந்தியாவின் 2வது பெரிய IT சேவை நிறுவனமான இன்போசிஸ், மார்ச் மாதத்திற்குள் தனது ஊழியர்களுக்கு வருடாந்திர சம்பள உயர்வு கடிதங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் பெங்களூரு கேம்பஸ்-ல் சமீபத்தில் நடைபெற்ற ஊழியர் கூட்டத்தில் இன்போசிஸ்-ன் மனிதவளத் துறை தலைவர் ஷாஜி மேத்யூ முக்கியமான தகவலைத் தெரிவித்தார்.
ஷாஜி மேத்யூ கூறுகையில் ஊழியர்களுக்கான சம்பள உயர்வுகள் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என இன்போசிஸ் ஊழியர்களுக்குத் தெரிவித்தார். சாப்ட்வேர் இன்ஜினியர்கள், மூத்த இன்ஜினியர்கள் மற்றும் சிஸ்டம் இன்ஜினியர்கள் போன்ற பதவிகளை உள்ளடக்கிய ஜாப் லெவல் 5 (JL5) மற்றும் அதற்கு கீழ் உள்ள ஊழியர்கள் ஜனவரி 1 முதல் திருத்தப்பட்ட சம்பளத்தைப் பெறுவார்கள்.

அதேசமயம், மேனேஜர்கள், மூத்த மேனேஜர்கள் மற்றும் டெலிவரி மேனேஜர்கள் உள்ளிட்ட ஜாப் லெவல் 6 (JL6) மற்றும் அதற்கு மேல் உள்ள ஊழியர்கள் ஏப்ரல் 1 முதல் திருத்தப்பட்ட சம்பளத்தைப் பெறுவார்கள் என ஷாஜி மேத்யூ கூறியுள்ளார்.
தனிப்பட்ட ஊழியர்களின் செயல்திறன் மதிப்பீட்டின் அடிப்படையில் ஊதிய உயர்வுகளின் சதவீதம் இறுதி செய்யப்பட்டு வருவதாக மேத்யூ தெளிவுபடுத்தினார். இந்த சம்பள உயர்வு முன்னதாக மதிப்பீடு செய்யப்பட்ட ரேட்டிங் அடிப்படையில் அளிக்கப்படும், மேலும் இதை ஒவ்வொரு ஊழியரின் மேனேஜர் உடன் பகிர்ந்து கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
இன்போசிஸ் சமீபத்திய காலாண்டு நிதியியல் முடிவுகளை வெளியிடும் போது, தலைமை நிதியியல் அதிகாரி ஜெயேஷ் சங்கராஜ்கா, ஊழியர்கள் இரண்டு கட்டங்களில் சம்பள உயர்வுகளைப் பெறுவார்கள் என்று தெரிவித்தார். நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் பெரும்பாலான ஊழியர்கள் தங்கள் சம்பள உயர்வுகளைப் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய ஊழியர்களுக்கான சராசரி சம்பள உயர்வு 6% முதல் 8% வரை இருக்கும் எனவும், வெளிநாட்டு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு இதைவிடவும் சற்று குறைவாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications