இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ்-ல் கடந்த 8 மாதத்தில் 6 மூத்த அதிகாரிகள் அடுத்தடுத்து வெளியேறியது மட்டும் அல்லாமல் வெளியேறிய அனைத்து ஊழியர்களும் முன்னணி நிறுவனத்தில் சிஇஓ-வாக சேர்ந்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் புதிய வர்த்தகத்தை பெறுவதில் அதிகப்படியான சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் இன்போசிஸ்-ன் முக்கிய மற்றும் பெரிய வர்த்தக கிளையான இன்போசிஸ் பிஸ்னஸ் பிராசஸ் மேனேஜ்மென்ட் (Infosys BPM) நிறுவனம் 2016-17 ஆம் நிதியாண்டில் இருந்து மோசமான வளர்ச்சியை கடந்த நிதியாண்டில் பதிவு செய்து முதலீட்டாளர்களுக்கும், அதன் ஊழியர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

கடந்த நிதியாண்டில் Infosys BPM நிறுவனத்தின் வருமானம் பெரிய அக்கவுன்ட்-களில் இருந்து குறைந்துள்ளதாலும், பல திட்டங்களின் வருமானத்தை இதன் வர்த்தக மாடலை அடிப்படையாக கொண்டு 2 வருடங்களுக்கு முன்பே கணக்கில் சேர்க்கப்பட்டு உள்ளது.
மார்ச் 31 உடன் முடிந்த நிதியாண்டில் Infosys BPM-ன் வருமானம் 934 மில்லியன் டாலர் மட்டுமே இது கடந்த நிதியாண்டை விடவும் வெறும் 4.2 சதவீத உயர்வு மட்டுமே, இதேபோல் ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவு 17 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த 10 வருடத்தில் குறைவான அளவாகும்.
2023 ஆம் நிதியாண்டில் Infosys BPM நிறுவனத்தின் டாப் 10 வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் வருமானத்தில் 28 மில்லியன் டாலர் குறைந்துள்ளது. மேலும் Infosys BPM நிறுவனத்தின் வருமானம் ஒட்டுமொத்த இன்போசிஸ் வருமானத்தில் 5.1 சதவீத பங்கீட்டை கொண்டு உள்ளது. இன்போசிஸ் 2023 ஆம் நிதியாண்டில் 18.21 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை பெற்றது.
இன்போசிஸ் BPM சமீபத்தில் தனது புதிய அலுவலகத்தை கோயம்புத்தூரில் அதிகாரப்பூர்வமாக திறந்தது. இப்புதிய இன்போசிஸ் BPM கோயம்புத்தூர் டெலிவரி சென்டரை இப்பிரிவு சிஇஓ மற்றும் நிர்வாக தலைவரான அனந்த ராதாகிருஷ்ணன், உயர் துணை தலைவர் மற்றும் குளோபல் HRD பிரிவு தலைவர் தீபேந்திரா மாதூர் ஆகியோர் திறப்பு விழாவில் கலந்துக்கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
இன்போசிஸ் கோயம்புத்தூர் அலுவலகம் விரிவாக்கம் செய்த நாளில் இருந்து, இந்தியா முழுவதும் இருக்கும் தமிழ்நாட்டு ஊழியர்கள் கோயம்புத்தூர்-க்கு டிரான்ஸ்பர் கேட்டு வருவாதாக தகவல் வெளியானது. கோரிக்கைகள் அளவுக்கு அதிகமாக குவிந்துள்ள காரணத்தால் புதிய அலுவலகத்தை விரிவாக்கம் செய்யவும் திட்டமிட வாய்ப்புகள் உள்ளது.
இன்போசிஸ் பங்குகள் இன்று கிட்டத்தட்ட 1 சதவீதம் உயர்ந்து 1,342.40 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால் 2023 ஆம் ஆண்டில் 11.88 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications