பெங்களூரு: ஐடி நிறுவனங்களை பொறுத்தவரை தலைமை செயல் அதிகாரியான சிஇஓ பொறுப்பில் இருப்பவர்களுக்கு அதிகபட்ச சம்பளம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஐடி நிறுவனங்களிலேயே அதிக சம்பளம் வாங்கக்கூடிய தலைமை செயல் அதிகாரிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான தியரி டெலபோர்ட். அவர் சுமார் 166 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்திருப்பது தெரியவந்துள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனம் 2024 ஆம் நிதியாண்டுக்கான ஆண்டு நிதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இதில் தலைமை செயல் அதிகாரியான சலில் பரேக்கிற்கு 66.25 கோடி ரூபாயை ஊதியமாக வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

2023ஆம் ஆண்டில் அவர் பெற்ற ஊதியம் 56 கோடி ரூபாயாக இருந்தது. இது தற்போது உயர்ந்திருக்கிறது. பெங்களூருவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரக்கூடிய இன்ஃபோசிஸ் நிறுவனம் கடந்த 2024 ஆம் நிதியாண்டில் எதிர்பார்த்த வளர்ச்சியை அடைந்துள்ளது. இதன் காரணமாகவே தலைமை செயல் அதிகாரியான சலில் பரேக்கிற்கு கூடுதலாக ஊதியம் கிடைத்துள்ளது.
அவரது சம்பள தொகுப்பை பொறுத்தவரை அடிப்படை ஊதியம் மற்றும் பிற அலொவென்சுகள், பங்குகள் மூலம் கிடைத்த பலன்கள் ஆகியவை அடங்கும். தற்போது அவரிடம் உள்ள பங்குகளின் மூலம் அவருக்கு கிடைத்திருக்கக்கூடிய பலன் என்பது 39.03 கோடி ரூபாய்.
அதே வேளையில் அவருடைய அடிப்படை ஊதியம் 7 கோடி ரூபாய், ஓய்வூதிய பலன்களாக 47 லட்சம் ரூபாய் போனஸ் ஆக 7.47 கோடி ரூபாய் என வழங்கப்பட்டுள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஒரு சாதாரண ஊழியர் பெறக்கூடிய சம்பளத்தை விட 677 மடங்கு அதிக ஊதியத்தை பரேக் பெற்றுள்ளார்.
இதனிடையே நிறுவன பங்குதாரர்களுக்கு கடிதம் எழுதியுள்ள பரேக் தன்னுடைய கவனம் முழுவதும் நிறுவனத்தின் வளர்ச்சியில் மட்டுமே இருப்பதாக கூறியுள்ளார். நடப்பு ஆண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனம் 11,900 கல்லூரி பட்டதாரிகளை ஃபிரஷர்களாக பணியில் சேர்த்துள்ளது.
2024 ஆம் நிதி ஆண்டில் மொத்தமாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை 3.17 லட்சமாக இருக்கிறது. இவர்களில் 2.50 லட்சம் ஊழியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பான திறன்களை திறன்கள் குறித்து பயிற்சி வழங்கியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான விப்ரோவின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான தியரி டெலபோர்ட் 166 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றிருந்தார். தற்போது அவருக்கு அடுத்து அந்த பதவியில் அமர்ந்திருக்கும் ஸ்ரீனிவாஸுக்கு 50 கோடி ரூபாய் ஊதியமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கீர்த்தி வாசன் 25.36 கோடி ரூபாயை ஊதியமாக பெறுகிறார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications