நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி. அண்மையில் நாட்டின் இளம் ஊழியர்கள் வாரத்துக்கு 70 மணிநேரம் வேலை பார்க்க வேண்டும் என்று யோசனை கூறினார்.
இன்போசிஸ் நிறுவனத்தை தொடங்கிய காலகட்டத்தில் தான் வாரத்துக்கு 85-90 மணிநேரம் உழைத்ததாகக் கூறுகிறார் 77 வயதான நாராயண மூர்த்தி. கடுமையான உழைக்கும் நாடுகள் தான் முன்னேற்றத்தைக் காணும். எனவே இந்தியாவின் இளைய தலைமுறையினர் வாரத்துக்கு 70 மணிநேரமாவது வேலை பார்த்தால்தான் இந்தியாவை உயர்த்திப் பிடிக்க முடியும் என்றார்.

காலை 6.20 மணிக்கெல்லாம் அலுவலகத்துக்குச் சென்று விடுவேன். இரவு 8.30 மணிக்குத் தான் கிளம்புவேன். வாரத்துக்கு ஆறு நாட்களுக்கு வேலை பார்ப்பேன். அயராத உழைப்பின் காரணமாகத் தான் பல நாடுகள் முன்னேற்றத்தைக் கண்டன என்பதை நான் அறிவேன் என்றார் மூர்த்தி.
எனது நாற்பதாண்டுக்கும் மேலான வேலைக் காலத்தில் வாரத்துக்கு 70 மணி நேரம் பணியாற்றினேன். 1994 ஆம் ஆண்டு வரை வாரத்துக்கு ஆறு வேலை நாட்கள் என்று அமலில் இருந்தது, அந்த சமயத்தில் வாரத்துக்கு 85-90 மணிநேரம் வேலை செய்வேன். அது வீண் போகவில்லை.
எனது பெற்றோர் கடுமையான உழைப்பில் நம்பிக்கை கொண்டவர்கள். இந்த அயராத உழைப்புதான் வறுமையிலிருந்து விடுபடுவதற்கான தாரக மந்திரம் என்று சொல்லித் தந்தார்கள். எனது பால்ய காலத்திலேயே இந்த பால பாடத்தை பெற்றோர்கள் எனக்குக் கற்றுத் தந்தனர். நாம் உழைக்கும் ஒவ்வொரு மணித்துளியிலும் அதற்கான பலன் நிறைந்திருக்கும் என்றார்.
கடந்த அக்டோபர் மாதத்தில் மூர்த்தி கூறிய கருத்து தேசிய அளவில் பெரும் விவாதத்தையும் எதிர்ப்பையும் சர்ச்சையையும் கிளப்பியது. இந்தியாவின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தைக் காணவேண்டுமென்றால் இளைய தலைமுறையினர் வாரத்துக்கு 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்பது தான் மூர்த்தியின் கருத்தாகும். இதன்படி வாரத்துக்கு ஆறு நாட்கள் வேலை என்றால் ஒவ்வொருவரும் தினசரி 12 மணிநேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும்.
இந்தக் கருத்துக்குப் பலதரப்பட்ட விமரிசனங்கள் எழுந்தன. வேலை தரமாக இருக்க வேண்டுமென்றால் அழுத்தம் இல்லாமல் ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறினர்.
இதற்கு பதில் தரும் வகையில் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஜப்பான், ஜெர்மனி நாடுகள் பொருளாதாரத்தில் உயர்ந்ததற்குக் காரணம் அந்நாட்டு மக்களின் கடும் உழைப்புதான் காரணம் என்றார் மூர்த்தி.
உலகிலேயே இந்தியாவில்தான் மிகக் குறைந்த அளவில் உற்பத்தி நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் நமது உழைப்பின் தரத்தை உயர்த்தாவிட்டால் நாடு முன்னேறாது என்றார்.
மூர்த்தியின் வாரத்துக்கு 70 மணிநேர வேலை யோசனைக்கு பிரபல தொழிலதிபர்களான ஓலாவின் பவிஷ் அகர்வால், சஜ்ஜன் ஜிண்டால், வினோத் கோஸ்லா, சுனில் ஷெட்டி ஆகியோர் வரவேற்பை அளித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications