இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக்கில் பட்டியலிடப்பட்டு 25 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. இன்போசிஸ் நிறுவனத்தை பொறுத்தவரை பலவற்றுக்கும் முன்னோடி நிறுவனமாக இருக்கிறது. இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமாக வளர்ந்து நிற்கும் இன்போசிஸ் நிறுவனம் 1981 ஆம் ஆண்டு புனேவில் தொடங்கப்பட்டது.
7 பொறியாளர்கள் அதாவது என்.ஆர்.நாராயணமூர்த்தி , நந்தன் நீலகேனி, கோபாலகிருஷ்ணன், எஸ்.டி.ஷிபுலால் கே. தினேஷ், என். எஸ். ராகவன் மற்றும் அசோக் அரோரா ஆகியோர் இணைந்து தொடங்கிய நிறுவனம் தான் இன்போசிஸ் கன்சல்டன்ட் பிரைவேட் லிமிடெட். சிறிய அளவில் தொடங்கப்பட்ட இன்போசிஸ் படிப்படியாக வளர்ச்சி அடைந்து உலக அளவில் ஐடி சேவை வழங்கக்கூடிய நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

1993 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் முதல் முதலாக மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. அப்போது இன்போசிஸ் நிறுவனத்தின் வருமானம் 5 மில்லியன் டாலர்கள், 250 ஊழியர்கள் மட்டுமே இந்த நிறுவனத்தில் பணி செய்து வந்திருந்தனர். தற்போது 18.2 பில்லியன் டாலர்கள் வருவாயுடன் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் இங்கே வேலை செய்கின்றனர்.
இன்போசிஸ் நிறுவனம் தான் முதன்முறையாக ஊழியர்களுக்கு நிறுவன பங்குகளை வழங்க தொடங்கியது. இதன் காரணமாக பெரும்பாலான ஊழியர்களின் நிறுவன பங்குகளை சொந்தமாக்கிக் கொண்டதோடு வருங்காலங்களில் அவர்கள் மிகப்பெரிய அளவில் பணக்காரர்கள் ஆவதற்கும் இது உதவிகரமாக இருந்தது.
குறிப்பாக 1990களில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிக்கு விண்ணப்பம் செய்தவர்களின் பெரும்பாலானவர்களின் கனவு அமெரிக்காவில் சென்று பணி செய்ய வேண்டும் என்பதுதான்.
ஏனெனில் அந்த சமயத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அமெரிக்காவை சேர்ந்தவர்களாக இருந்தனர. எனவே இந்த பணிக்காக பெரும்பாலான ஊழியர்களை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தது.
படிப்படியாக வளர்ச்சி அடைந்து வந்த இன்போசிஸ் நிறுவனம் 1999 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 100 மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட நிறுவனமாக உயர்ந்தது. இதனை அடுத்து உலகத்தையே திரும்பி பார்க்க வைக்கும் வகையில் 1999 ஆம் ஆண்டில் இன்போசிஸ் நிறுவனம் அமெரிக்க பங்குச்சந்தையான நாஸ்டாக்கில் பட்டியலிடப்பட்டது. அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை இன்போசிஸ் பெற்றது.
இன்போசிஸ் நிறுவனம் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் எப்படி வெளிப்படையாக செயல்பட வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக செயல்பட்டது என கூறலாம். ஏனெனில் இந்த நிறுவனம் முதன்முறையாக தங்களுடைய செயல்பாடுகள் மற்றும் தங்கள் நிறுவனக் கொள்கைகள், தங்கள் நிறுவனத்தில் இருக்கக்கூடிய வாரிய உறுப்பினர்கள், அவர்களின் தகுதிகள் , ஊதியம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் வெளிப்படையாக அறிவித்தது.
இது பல முதலீட்டாளர்களுக்கு நிறுவனத்தின் வெளிப்படை தன்மை மீதும் நிறுவனத்தின் வளர்ச்சி மீதும் ஒரு நம்பிக்கையே வரவழைத்தது. எனவே பங்குச்சந்தையில் பெரும்பாலானவர்கள் இன்போசிஸ் நிறுவன பங்குகளை வாங்குவதற்கு முனைப்பு காட்டினர்.
அது மட்டும் இன்றி இன்போசிஸ் நிறுவனம் தான் முதன்முறையாக அமெரிக்காவின் அக்கவுண்டிங் ஸ்டாண்டர்ட்களுக்கு ஏற்ற வகையில் தங்களுடைய நிதி அறிக்கை வெளியிட்டது. இன்போசிஸ் நிறுவனத்தை பொருத்தவரை ஊழியர்களில் ஜூனியர் சீனியர் என்ற பாகுபாடு இல்லாமல் ஒரு நிறுவனத்தில் அனைவரும் சமமானவர்கள் என்ற ஒரு பார்வையை கொண்டு வந்ததாக முன்னாள் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
நிறுவனத்தில் உள்ள கேன்டீன், லிப்ஃட் என அனைத்துமே அனைத்து ஊழியர்களுக்குமே பொதுவானது என்ற கொள்கையை பின்பற்றி வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இரண்டாவது மிகப்பெரிய ஐடி சேவை வழங்கக்கூடிய நிறுவனமாக இன்போசிஸ் நிறுவனம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications