இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் தனது ஊழியர்களுக்குச் சுமார் 8 மாதமாக சம்பள உயர்வை அளிக்காமல் தனது லாபத்தை உயர்த்தி முதலீட்டாளர்களின் நன்மதிப்பை பெற்று வந்த நிலையில், செப்டம்பர் காலாண்டில் ஊழியர்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதற்காக நவம்பர் 1 ஆம் தேதி முதல் சம்பள உயர்வை அளிக்கப்படுவதாக அறிவித்தது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து அனைத்து இன்போசிஸ் ஊழியர்களும் சம்பள உயர்வை மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் டிசம்பர் 15 ஆம் தேதி வரையில் சம்பள உயர்வு கடிதத்தை அளிக்காமல் காலம் கடத்தியது. இந்த நிலையில் கடந்த வாரம் சம்பள உயர்வு குறித்து அனைத்து ஊழியர்களுக்கும் தங்களது அணியின் ப்ராஜெக்ட் மேனேஜரிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது.

இந்த அழைப்பு தான் சம்பள உயர்வு குறித்த ஒட்டுமொத்த இன்போசிஸ் ஊழியர்களின் நம்பிக்கையை உடைத்தது. இந்த அதிகாரப்பூர்வ அழைப்பில் ஒவ்வொரு பதவியில் இருக்கும் ஊழியர்களுக்குப் பிரத்தியேகமாகத் தகுதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, இதில் தேர்ச்சி அடைந்தோருக்கு தான் சம்பள உயர்வு என அழைக்கப்பட்டது.
பொதுவாக இன்போசிஸ் நிர்வாகம் இந்நிறுவன பணியில் சேர்ந்து 10 மாதம் தாண்டிய அனைத்து புதிய ஊழியர்களுக்கும், ஏற்கனவே இருக்கும் ஊழியர்களுக்கும் தங்களுடைய அப்ரைசல் சைக்கிளில் சம்பள உயர்வை அளிக்கும். ஆனால் இந்த முறை அப்ரைசல் சைக்கிள் முடித்து ரேட்டிங் கொடுக்கப்பட்டு அதன் பின்பு புதிதாகச் சில கட்டுப்பாடுகளைப் பதவி வாரியாக விதித்துச் சம்பளம் அளிக்கப்பட்டு உள்ளது.
இப்படிக் கொடுக்கப்பட்ட சம்பள உயர்வும் மிகவும் குறைவாகக் கொடுக்கப்பட்டு உள்ளது என்பது தான் மிகவும் சோகமான விஷயம், இதுகுறித்து இன்போசிஸ் ஊழியர்கள் மத்தியில் கேட்டபோது இந்த வருடம் பெரும்பாலான ஊழியர்களுக்கு 4 சதவீதம், 5 சதவீதம் அதிகப்படியாக 10 சதவீதம் மட்டுமே சம்பள உயர்வு கொடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டும் அல்லாமல் மொத்த ஊழியர்களின் 10 சதவீதம் முதல் 30 சதவீத ஊழியர்களுக்கு மட்டுமே சம்பள உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்தச் சம்பள உயர்வு மூலம் ஒரு ஊழியரின் சம்பளத்தில் 1000 ரூபாய் கூட முழுசா உயரவில்லை எனத் தங்களுடைய வேதனையைத் தெரிவிக்கின்றனர். இத்தகைய நிலை இந்திய ஊழியர்களுக்கு மட்டுமா என்றால் இல்லை, அமெரிக்கா, ஐரோப்பாவில் இருக்கும் ஊழியர்களுக்கும் இதே நிலை தான்
இதேபோல் பதவி உயர்வும் அதிகப்படியான ஊழியர்களுக்கு மறுக்கப்பட்டு உள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் பதவி உயர்வு மூலம் ஒரு பேன்ட்-ல் இருந்து மற்றொரு பேன்ட்-க்கு மாறும்போது அடிப்படை சம்பளமே அதிகரிக்கும். இதனால் பதவி உயர்வையும் இன்போசிஸ் நிர்வாகம் மறுத்துள்ளது.
ஏற்கனவே சம்பள உயர்வில் 8 மாத தாமதம், இதில் பல கண்டிஷன் பெயரில் 30 சதவீத ஊழியர்களுக்கு மட்டுமே சம்பள உயர்வு, அதுவும் 4 -5 சதவீதம், பதவி உயர்வு இல்லை. இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் என இன்போசிஸ் ஊழியர்கள் புலம்பி வருகின்றனர். இதனால் இன்போசிஸ் ஊழியர்கள் அதிகளவில் வெளியேற வாய்ப்புகள் உள்ளது.
ஐடி துறையில் இருக்கும் பெரும்பாலான நிறுவனங்களின் மொத்த வருமானத்தில் பெரும் பகுதி செலவு செய்யப்படுவது ஊழியர்களின் சம்பளம். சுமார் 50 முதல் 60 சதவீதம் வருமானத்தை ஊழியர்களின் சம்பளமாகவே அளிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications