இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அனைத்தும் ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட தயாராகிக்கொண்டு இருக்கிறது. இன்று டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக் ஆகியவை தனது ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிடுவதால் முதலீட்டாளர்கள் கூர்ந்து கவனித்து வரும் வேளையில் இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் பொதுவாக ஏப்ரல் மாதம் முதல் சம்பள உயர்வை கொடுக்கும், அதாவது ஜூலை மாத முதல் வாரத்தில் சம்பள உயர்வுக்கான லெட்டர்களை கொடுத்து, ஜூலை மாத சம்பளத்தில் ஏப்ரல், மே, ஜூன் மாத அரியர்கள் உடன் சேர்த்து கொடுக்கும்.

ஆனால் ஜூலை 12 ஆம் தேதியாகியும் இதுவரையில் உயர்மட்ட அதிகாரிகளுக்கு கீழ் இருக்கும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வுக்கான லெட்டர் அளிக்கப்படவில்லை. இதன் மூலம் இன்போசிஸ் நிர்வாகம் தனது பெரும் பகுதி ஊழியர்களுக்கு சம்பள உயர்வை கொடுக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2023 ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்து இன்போசிஸ் அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் வேளையில், நிதி நெருக்கடியான நிலையில் இருந்து தப்பிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதா அல்லது ஜூன் காலாண்டு முடிவுகளில் நல்ல லாப அளவீட்டை காட்டிய பின்பு ஆகஸ்ட் மாதம் சம்பள உயர்வு அளிக்க திட்டமிட்டு உள்ளதா என தெரியவில்லை.
இதற்கு முன்பு இன்போசிஸ் 2020ல் கொரோனா தொற்று காலத்தில் நிதி பற்றாக்குறை காரணமாக ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அளிப்பதை நிறுத்தியது. ஜூலை மாத துவக்கத்தில் இன்போசிஸ் உயர்மட்ட அதிகாரிகளுக்கு தங்களுடைய சம்பள உயர்வு குறித்த அறிவிப்புகள் வந்தாலும் உயர்த்தப்பட்ட சம்பளம் வரவில்லை.
இதேவேளையில் இந்திய ஐடி நிறுனங்களை பொருத்தவரையில் ஒரு பழக்கம் உள்ளது. ஊழியர்கள் தொடர்பான முடிவில் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல், டெக் மஹிந்திரா ஆகியவை ஒரேமாதிரியான முடிவை எடுக்கும். உதாரணமாக பிரஷ்ஷர்களின் சம்பளம், வருடாந்திர சராசரி சம்பள உயர்வு, வேரியபிள் பே தொகை அளிப்பு..

இப்படியிருக்கும் சூழ்நிலையில் இன்போசிஸ் தங்களுடைய ஊழியர்களுக்கு இந்த வருடத்திற்கான சம்பள உயர்வு இதுவரையில் அளிக்கப்படாத பட்சத்தில் டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களும் இதை பின்பற்றுமா..? இதுமட்டும் நடந்துவிட்டால் டாப் 5 ஐடி நிறுவனங்களில் இருக்கும் 10 லட்சம் ஐடி ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
இதற்கிடையில் ஜூலை 12 ஆம் தேதி வரையில் இன்போசிஸ் ஊழியர்களுக்கு இன்போசிஸ் நிர்வாகம் சம்பள உயர்வு குறித்து எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications