இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், தனது ஊழியர்களுக்கு கடந்த நிதியாண்டுக்கான சம்பள உயர்வை கொடுக்காமல் தொடர்ந்து தள்ளிவைத்து வருகிறது. இதனால் இன்போசிஸ் ஊழியர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் வேளையில் மற்றொரு ஷாக்கிங் செய்தி வந்துள்ளது.
பொதுவாக முந்தைய நிதியாண்டுக்கான சம்பள உயர்வை நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு இறுதியில் அல்லது 2வது காலாண்டு துவக்கத்தில் கொடுக்கும் இன்போசிஸ், இந்த ஆண்டு நான்காவது காலாண்டான மார்ச் காலாண்டில் ஊதிய உயர்வை அளிக்கும் என்று அறிவித்துள்ளது.

இன்போசிஸ் நிர்வாகம் கடந்த 3 வருடத்தில் சம்பள உயர்வை தாமதமாகவும், பல பிரிவு ஊழியர்களுக்கு சம்பள உயர்வையே வழங்காமலும், வேரியபிள் பே தொகையை ரத்து செய்வதும் என ஊழியர்களின் நிதிநிலையை பாதிக்கும் வகையில் பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த நிலையில் சம்பள உயர்வை 4வது காலாண்டு வரையில் ஒத்திவைத்துள்ளது.
சம்பள உயர்வை ஒத்திவைக்க வர்த்தக சூழ்நிலைகளை முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாகவே பன்னாட்டு நிறுவனங்களின் குறைவான டெக் முதலீடுகள், வாடிக்கையாளர் பட்ஜெட்டுகளில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் அதிகரித்து வரும் பொருளாதார நிலைத்தன்மையின்மை ஆகியவை தனது உலகளாவிய வர்த்தகத்திற்கு பெரும் சவாலாக பார்க்கிறது.
இந்த சவால்களுக்கு மத்தியில் முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபத்தை காட்டி தனது பங்கு மதிப்பையும், நிறுவனத்தின் சந்தை மதிப்பையும் நிலைநிறுத்திக்கொள்ள ஊழியர்களின் சம்பள உயர்வையும், வேரியபிள் பே தொகையை கை வைப்பது மூலம் தனது லாப அளவுகளை அதிகரித்து காட்டுகிறது. இதை இன்போசிஸ் மட்டும் அல்லாமல் விப்ரோ, ஹெச்சிஎல் போன்ற பல நிறுவனங்கள் செய்கிறது.
இன்போசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கான சம்பள உயர்வை 2ஆம் ஆண்டு முடிவுகளை அறிவிக்கும் போது கட்டாயமாக கொடுப்போம் என அறிவித்தது. அப்போது வெளியிட்ட அறிவிப்பின் படி ஒரு பகுதி ஊழியர்களுக்கான சம்பள உயர்வை ஜனவரியிலும், மீதமுள்ள ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதமும் அளிக்கப்படும் என இன்போசிஸ் தலைமை நிதியியல் அதிகாரியான ஜெயேஷ் சங்கராஜ்கா உறுதி அளித்தார். ஆனால் தற்போது இதை 4ஆம் காலாண்டுக்கு மொத்தமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
HCL டெக், LTIமைண்ட்ரீ மற்றும் எல்&டி டெக் சர்வீசஸ் உள்ளிட்ட பிற ஐடி நிறுவனங்களும் இதே போன்ற போக்கை கொண்டுள்ளது. இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி இளைஞர்களை வாரம் 70 மணிநேரம் பணியாற்ற கூறும் வேளையில் இன்போசிஸ் சம்பள உயர்வு கூட அளிக்காமல் ஊழியர்களை பாடாய்படுத்துகிறது.
2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், செப்டம்பர் 30, 2024 அன்று முடிவடைந்த காலாண்டிற்கு தகுதியான ஊழியர்களுக்கு இன்ஃபோசிஸ் பர்பாமென்ஸ் போனஸ்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications