கடந்த சில ஆண்டுகளாகவே ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது என்பது அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் கடந்த ஆண்டு 12000க்கும் அதிகமான ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டு ஒட்டுமொத்த ஐடி துறை அதிர்ச்சி அடைய செய்தது.
இந்த நிலையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு வைக்கக்கூடிய ஒரு செயலில் இறங்கி இருக்கிறது. இன்போசிஸ் நிறுவனம் ஏஐ ஏஜென்ட் பயன்பாட்டை தங்களுடைய நிறுவனத்திற்குள் கொண்டு வந்திருக்கிறதாம். அண்மையில் தான் இன்போசிஸ் நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனமான காக்னிசனோடு ஒரு ஒப்பந்தம் செய்தது.

இதன்படி அந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் இன்போசிஸ் நிறுவனத்திற்கு ஏஐ கருவியான Devin( டெவினை) வழங்கியுள்ளது. இந்த டெவின் ஏஐ கருவி என்பது ஒரு தானியங்கி மென்பொருள் பொறியாளர். அதாவது ஒரு மென்பொருள் பொறியாளர் என்ன வேலைகளை எல்லாம் செய்வாரோ டெவினும் அந்த வேலைகளை எல்லாம் செய்யும்.
கோடிங் எழுதுவது, பக் ஏற்பட்டால் அதனை சரி செய்வது என எண்ட் - டூ- எண்ட் பணிகளை செய்யுமாம். இதனை தங்கள் நிறுவனத்தில் இன்போசிஸ் பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது. முதலில் இண்டர்னல் வேலைகளில் டெவினை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். நிறுவனத்தின் செயல் திறனை மேம்படுத்துவதற்கு இப்படி ஒரு நடவடிக்கை எடுப்பதாக இன்போசிஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
ஆனாலும் ஊழியர்களை பொருத்தவரை இது நல்ல செய்தி கிடையாது. இன்போசிஸ் நிறுவனம் ஏஐ ஏஜெண்ட் செயல்பாட்டை படிப்படியாக அதிகரித்துவிட்டு, ஜூனியர் டெவலப்பர்கள் வேலையில் கை வைக்க போகிறது என்றும் புதிதாக பிரஷர்களை வேலைக்கு எடுப்பதை நிறுத்தப் போகிறது என்பதற்கான ஒரு எச்சரிக்கை மணி தான் இது என பலரும் தெரிவிக்கின்றனர்.
இன்போசிஸ் தங்களுடைய வாடிக்கையாளர்களின் நிறுவனங்களின் இந்த ஏஐ கருவியை பொருத்தி மனித பொறியாளர்களோடு இணைந்து செயல்பட வைக்க முடிவு செய்து இருக்கிறதாம். கூடிய விரைவில் ரீடெய்ல், பைனான்ஸ், இன்சூரன்ஸ் எனர்ஜி துறைகளிலும் இந்த ஏஐ ஏஜென்ட் பயன்பாட்டை விரிவுபடுத்த இருக்கிறது.
6 மாதங்களாக டெவின் ஏஐ ஏஜெண்டை வைத்து பரிசோதனை செய்ததில் பொதுவாக மனிதர்களை வைத்து செய்யும் போது பல மாதங்கள் எடுத்துக்கொண்ட பிராஜக்ட்டுகளை ஏஐ கருவி மூலம் வேகமாகவும் அதே வேலையில் சிக்கலான வேலைகளை கூட துரிதமாகவும் செய்ய முடிந்தது என்கிறது இன்போசிஸ்.
முதலில் செயல்திறனை மேம்படுத்துகிறோம் என கூறுவார்கள் ஆனால் படிப்படியாக மனிதர்களுக்கு மாற்றாக பயன்படுத்த தொடங்கிவிடுவார்கள் என பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே கூகுள், மைக்ரோசாப் நிறுவனங்கள் ஏஐ மூலம் கோடிங் வேலைகளை செய்கின்றன. தற்போது அவற்றை மேற்பார்வையிட்டு மேலாண்மை செய்வது மட்டுமே மனிதர்களின் வேலையாக உள்ளது. தற்போது இன்போசிஸும் அது போன்ற வேலையை தொடங்கிவிட்டது. இது கடைசியாக பணிநீக்கத்தில் தான் சென்று முடியும் என்பதே பலரது கவலையாக உள்ளது.


Click it and Unblock the Notifications