பெங்களூரு: இந்தியாவில் பல லட்சம் பட்டதாரிகளின் வாழ்க்கையை மாற்றிய முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் இன்று தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ள நிலையில் நிறுவனத்தின் ஊழியர்கள் சேர்ப்பு எண்ணிக்கையும் வெளியிட்டு உள்ளது.
இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்போசிஸ், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அதன் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 1,908 பேரை இழந்துள்ளது. இதன் மூலம் தொடர்ச்சியாக ஆறு காலாண்டுகளாக ஊழியர் எண்ணிக்கை குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் ஜூன் 2024 காலாண்டின் இறுதியில் நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கை 315,332 ஆகக் குறைந்துள்ளது. கடந்த மார்ச் 2024 காலாண்டில் இது 317,240 ஆக இருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, ஊழியர் எண்ணிக்கை 20,962 குறைந்துள்ளது.
2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் இன்போசிஸ் பணியாளர் வெளியேற்ற விகிதம் 12.7% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த காலாண்டில் 12.6% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்போசிஸ் நிறுவனத்தில் மூத்த அதிகாரிகள் வெளியேறுவது அனைவருக்கும் தெரியும், ஆனால் அனைத்து நிலையிலும் ஊழியர்கள் வெளியேறுவது அட்ரிஷன் விகிதம் உயர்ந்தது மூலம் தெரிகிறது.
மேலும் இன்போசிஸ் தனது ஜூன் காலாண்டு முடிவுகளில் 2025 ஆம் நிதியாண்டில் 20000 பிரஷ்ஷர்களை பணியில் சேர்க்க உள்ளதாக அறிவித்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தில் 3 காலாண்டுக்குப் பின்பு ஜூன் காலாண்டில் 5,452 ஊழியர்கள் கூடுதலாக பணியில் சேர்த்துள்ளது. இதன் மூலம், ஜூன் மாத இறுதியில் நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கை 6,06,998 ஆக உயர்ந்துள்ளது, மார்ச் 2024 இறுதியில் டிசிஎஸ் ஊழியர் எண்ணிக்கை 6,01,546 ஆக இருந்தது.
இதேபோல் ஹெச்சிஎல் ஊழியர்கள் எண்ணிக்கை ஜூன் காலாண்டில் 8,080 பேர் அதிகரித்துள்ளது, இதில் 1078 பேர் பிரஷ்ஷர்களாகும். இதன் மூலம் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 2,19,401 ஆக உயர்ந்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் எண்ணிக்கை 6 காலாண்டுகளாகக் குறைந்து வருவது பெரும் கவலையை அளிக்கிறது. ஒருபக்கம் ஏஐ சேவையை அதிகளவில் தனது நிர்வாகத்தில் புகுத்தி வரும் வேளையில், ஊழியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவது இந்நிறுவன ஊழியர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சந்தை கணிப்புகளைத் தாண்டி ரூ.12,040 கோடி அளவிலான லாபத்தைப் பதிவு செய்து 9% வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதேபோல் HCL டெக்னாலஜிஸ் 2024 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.4,257 கோடி அளவிலான லாபத்தைப் பெற்ற நிகர லாபம் 20% அதிகரித்துள்ளது.
இவ்விரு நிறுவனங்களை ஒப்பிடும் போது இன்போசிஸ் நிகர லாபம் ரூ.6,368 கோடி பதிவு செய்து 7.1% அளவிலான வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளது. இது முதலீட்டாளர்களை யோசிக்க வைக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications