இன்போசிஸ் நிறுவனம் 2023-24ஆம் நிதியாண்டுக்கான கடைசி காலாண்டு முடிவுகளை வெளியிட்டு இருக்கும் வேளையில், ஐடி ஊழியர்களுக்கும், ஐடி துறையில் புதிதாக நுழைய திட்டமிடுவோருக்கும் அதிர்ச்சி அளிக்கும் செய்தியை வெளியிட்டு உள்ளது.
இன்போசிஸ் நிறுவனம் மார்ச் காலாண்டில் 7,969 கோடி ரூபாய் லாபத்தை பதிவு செய்து கடந்த ஆண்டை காட்டிலும் 30 சதவீத வருடாந்திர உயர்வை பதிவு செய்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் வருவாய் ரூ.37,923 கோடியாக உடன் 1 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இன்போசிஸ் நிறுவனம் 2022-23ஆம் நிதியாண்டின் முடிவில் 343,234 பணியாளர்களுடன் முடித்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் காலாண்டில் 317,240 பணியாளர்களுடன் முடித்துள்ளது. இதன் மூலம் கடந்த ஒரு வருடத்தில் 25,994 ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடந்த இருபது ஆண்டுகளில் இன்போசிஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் எண்ணிக்கை சரிந்தது இதுவே முதல் முறையாகும். 2022-23 ஆம் நிதியாண்டில் 21,219 புதிய பணியாளர்களை சேர்த்த இன்போசிஸ் இந்த ஆண்டு 25,994 ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
2024 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் 6,101 பணியாளர்களும், நான்காம் காலாண்டில் 3,611 பணியாளர்களும் குறைந்திருந்தனர். இந்த நிதியாண்டில் ஊழியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் நிறுவனத்தில் AI பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதனால் இந்த ஊழியர்கள் எண்ணிக்கை குறைப்பு என்பது தொடரும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இன்போசில் நிறுவனத்தில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பது பணிநீக்கம் செய்யப்பட்டதன் மூலம் நடக்கவில்லை, நிறுவனத்தில் இருந்து வெளியேறிய ஊழியர்களுக்கு மாற்றாக நிரப்பப்படவில்லை மற்றும் புதியதாக ஊழியர்களை சேர்க்காமல் பென்ச்-ல் இருக்கும் ஊழியர்களை அதிகம் பயன்படுத்தி உள்ளது.
இதனால் செலவுகள் குறைக்கப்பட்டு லாபம் எப்போதும் இல்லாத வகையில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த தடாலடி உயர்வுக்கு வருமான வரி துறையில் இருந்து கிடைத்த டாக்ஸ் ரீபண்ட் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இன்போசிஸ் நிறுவனத்தின் நிதித் தலைமை அதிகாரி ஜெயேஷ் சங்கர்ஜ்கா (Jayesh Sanghrajka) கூறுகையில், கடந்த சில காலாண்டுகளில் எங்கள் பணியமர்த்தல் மாடல் கணிசமாக மாற்றமடைந்துள்ளது. இப்போதும் நாங்கள் பல்கலைக்கழக கேம்பஸ் இன்டர்வியூவ்-க்கு செல்லும் திட்டத்தில் இல்லை என்று தெரிவித்தார்.
குறிப்பிடத்தக்க விதமாக, இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி நிலன்ஞ்சன் ராய் வெளியேறிய நிலையில், புதிய சிஎப்ஓ-வாக ஜெயேஷ் சங்கர்ஜ்கா நியமக்கப்பட்டார். இன்போசிஸ் நிறுவனத்தில் தொடர்ந்து 5வது காலாண்டாக ஆட்சேர்ப்பு குறைவாக உள்ளது.
ஊழியர்கள் எண்ணிக்கை குறைவதும், கேம்பஸ் இண்டர்வியூவ் செல்லாமல் இருக்கும் இரு நிலைப்பாடும் ஐடி ஊழியர்களுக்கும், ஐடி துறையில் புதிதாக நுழைய திட்டமிடுவோருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications