இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ், இரண்டாம் காலாண்டில் அதாவது ஜூலை-செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இக்காலாண்டிற்கான நிதியியல் முடிவுகளைத் தாண்டி இன்போசிஸ் தான் புதிதாகப் பெற்ற ஆர்டர்கள் மதிப்பு, ஊழியர்கள் எண்ணிக்கையும் வெளியிட்டு உள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தில் கடந்த ஆறு காலாண்டுகளாகத் தொடர்ந்து ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், இக்காலாண்டில் முதல் முறையாக மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இக்காலாண்டில் சுமார் 2,456 ஊழியர்கள் அதிகரித்துள்ளனர்.

செப்டம்பர் 30 நிலவரப்படி, இன்போசிஸின் மொத்த பணியாளர் எண்ணிக்கை 317,788 ஆக உள்ளது, இது முந்தைய காலாண்டில் 315,332 ஆக இருந்தது. ஜூன் காலாண்டில், நிறுவனம் 1,908 ஊழியர்களைக் குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டின் இன்போசிஸ்-ன் அட்ரிஷன் விகிதம் 12.7% இலிருந்து 12.9% ஆக சற்று உயர்ந்தது, இருப்பினும் முந்தைய ஆண்டின் 2வது காலாண்டில் பதிவு செய்யப்பட்ட 14.6% ஐ விட குறைவாக உள்ளது.
இதேவேளையில், இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), 2ஆம் காலாண்டில் 5,726 ஊழியர்களை அதிகமாக சேர்த்துள்ளது, இதன் மூலம் அதன் மொத்த பணியாளர் எண்ணிக்கை 612,724 ஆக உயர்ந்தது.
இந்திய ஐடி சேவை துறையின் மூன்றாவது மிகப்பெரிய நிறுவனமான ஹெச்சிஎல் டெக் இக்காலாண்டில் ஊழியர்கள் எண்ணிக்கை 780 குறைத்து, அதன் மூலம் மொத்த எண்ணிக்கையை 218,621 ஆக குறைந்துள்ளது.
இதேவேளையில் இன்போசிஸ் நடப்பு நிதி ஆண்டில் சுமார் 15,000-20,000 புதிய பணியாளர்களை நியமிக்கும் என்று முன்னதாக திட்டமிட்டிருந்தது. இந்த திட்டத்தில் இருந்து பின்வாங்காது என அறிவித்துள்ளது. இதற்கு ஏற்றார் போல் ஊழியர் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது.
இன்போசிஸ் 2025ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் 5.1 சதவீத உயர்வுடன் ரூ. 40,986 கோடி வருவாயும், 4.7% வளர்ச்சியில் ரூ. 6,506 கோடி நிகர லாபத்தையும் பெற்றுள்ளது. இது முந்தை காலாண்டு உடன் ஒப்பிடுகையில் நிகர லாபம் மற்றும் வருவாய் முறையே 4.2% மற்றும் 2.2% வளர்ச்சி அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications