பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண் ரேபிடோவில் பைக் புக் செய்து பயணம் செய்த போது தன்னுடைய பைக் ஓட்டுநர் இன்போசிஸ் நிறுவன ஊழியர் என்பதை அறிந்து ஆச்சர்யமடைந்திருக்கிறார். அவருடைய பதிவும் பலருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
சார்மிகா நாகலா என்ற பெண் பெங்களூருவில் பணிபுரிகிறார். அவர் ரேபிடோவில் பைக் டாக்சி புக் செய்துள்ளார். அப்போது பைக் ஓட்டுநர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆங்கிலத்தில் சரளமாக பேசினாராம். பின்னர் பைக் வந்ததும் ஏறி அவருடன் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது தான் தன்னுடைய பைக் ஓட்டுநர் இன்போசிஸ் நிறுவன ஊழியர் என்பதை அறிந்தாராம். அவருடனான கலந்துரையாடலை தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கிறார்.

இருவருக்கும் இடையே நடந்த கலந்துரையாடலில் பைக் டாக்சி ஓட்டுனர் இன்போசிஸ் நிறுவன ஊழியராக இருந்தாலும் ஏன் பைக் ஓட்டுகிறார் என கேள்வி எழுப்பியுள்ளார். அந்த ஓட்டுநர் தான் இன்போசிஸ் நிறுவனத்தில் காண்ட்ராக்ட் மேனேஜ்மென்ட் குழுவில் வேலை செய்து வருவதாக கூறினாராம். இந்த நபர் வார நாட்களில் அலுவலகத்திற்கு சென்று வேலை செய்வாராம் வார இறுதி நாட்களில் பைக் டாக்ஸி சேவையில் இணைந்து பைக் ஓட்டுவாராம். இதன் மூலம் அவருக்கு வார இறுதி நாட்களில் கூடுதலாக பணம் கிடைக்கிறது என தெரிவித்திருக்கிறார்.
வார இறுதி நாட்களில் வெறுமனே போனை பார்த்துக் கொண்டிருக்கும் பலருக்கு மத்தியில் இந்த நபர் கடினமாக உழைக்கிறார் என அவர் பதிவு செய்துள்ளார். இதுபோல பல்வேறு ஆச்சரியங்களை தினம் தினம் பெங்களூரு தனக்கு தருகிறது என அவர் கூறியிருக்கிறார். இவர் மட்டுமல்ல நேற்றைய தினம் தான் ஊபரில் பைக் புக் செய்து பயணம் செய்த போது அந்த நபரும் ஒரு ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் வேலை செய்பவர் என்பதை தெரிந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
வேலை முடித்து விட்டு தான் வீட்டுக்கு செல்வதாகவும் , எப்படியும் நீண்ட தூரம் செல்கிறோம் வழியில் ஒரு ரைடினை எடுக்கலாமே அவர் ரைடினை எடுத்ததாக கூறினாராம். பெங்களூரு மனிதர்கள் நாள்தோறும் நமக்கு பல பாடங்களை கற்று தருகின்றனர் என அவர் கூறியுள்ளார். பெங்களூருவில் வேலைக்கு செல்லும் பலரும் இது போல கிக் வேலைகளில் ஈடுபடுவது நன்றாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர் இதேபோல மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர் ஒருவர் தனிமையை போக்குவதற்காக ஆட்டோ ஓட்டுநராக வார இறுதி நாட்களில் வேலை செய்யும் செய்தி வெளியானதையும் அவர் தன்னுடைய பதிவினில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications