இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் அடுத்தடுத்து பல பிரச்சனைகளை 2023 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்காவில் அடுத்தடுத்து வங்கிகள் திவாலானது மூலம் வங்கிகளுக்கான ஐடி சேவை வர்த்தகத்தில் பெரிய வர்த்தகப் பாதிப்பை உருவானது முதல்.. நேற்று தலைமை நிதியியல் அதிகாரியான நிலஞ்சன் ராய் ராஜினாமா வரையில் பல சவால்களை எதிர்கொண்டது.
இந்த நிலையில் இன்போசிஸ் ஊழியர்களின் செயல்திறனையும், பென்ச்-ல் இருக்கும் ஊழியர்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகப் பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்தது இன்போசிஸ். இதில் மிகவும் முக்கியமாக வெளியில் இருந்து புதிதாக ஊழியர்களைச் சேர்க்கும் பணி மொத்தமாக முடங்கியது.

இதனால் பென்ச்-ல் இருக்கும் ஊழியர்களை முழுமையாகப் பயன்படுத்துவது மட்டும் அல்லாமல் புதிய தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு புதிய திட்டத்திலும் சேர்க்கப்பட்டனர்.இதேவேளையில் ஊழியர்களின் செயல்திறனை அதிகரிக்கவும், ஊழியர்கள் ஒன்றிணைந்து பணியாற்றுவது மூலம் வேகமாகப் பணிகளை முடிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் அதிகப்படியான ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவழைத்தது.
தற்போது 80 சதவீத இன்போசிஸ் ஊழியர்கள் வாரத்தில் 3 நாள் அலுவலகத்திற்கு வரும் வேளையில், சில பிரிவு ஊழியர்கள், சில திட்ட ஊழியர்கள், சில அலுவலகம் எனக் குறிப்பிட்ட ஊழியர்கள் தொடர்ந்து வொர்க் ப்ரம் ஹோம் செய்து வருகின்றனர். இதை முடிவுகட்ட இன்போசிஸ் திட்டமிட்டுள்ளது.
இன்போசிஸ் நிர்வாகத்தின் ஊழியர்கள் பதிவேடு தளத்தில் வாரம் 2 நாள் மட்டுமே வொர்க் ப்ரம் ஹோம் அப்ளை செய்ய முடியும் வகையில் சமீபத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்ட நிலையில், இதை ஒட்டுமொத்த இன்போசிஸ் ஊழியர்களுக்கும் அமல்படுத்தத் திட்டமிட்டு உள்ளது நிர்வாகம்.
இதனால் அனைத்துத் தரப்பு ஊழியர்களும் வாரத்தில் 3 நாள் கட்டாயம் அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த உள்ளது. இதுகுறித்த ஈமெயில் இன்போசிஸ் வெர்டிகல் தலைவர்களிடம் இருந்து வந்துள்ளது, இதில் அனைத்து ஊழியர்களும் வாரம் 3 நாள் அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டியது விரைவில் கட்டாயமாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இது ஒருபக்கம் இருக்க மறுபுறம் ஜனவரி 3 ஆம் தேதி முதல் இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த ஷட்டில் அதாவது போக்குவரத்து சேவைக்கு இனி தினமும் 150 ரூபாய் எனவும் மாதம் 1500 ரூபாய் எனவும் கட்டணம் வசூலிக்க உள்ளது. இதேபோல் ஹெல்த் கிளப் சேவைக்குத் தினமும் 100 ரூபாயும், மாதம் 700 ரூபாயும் கட்டணத்தை வசூலிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதனால் இன்போசிஸ் ஊழியர்கள் மத்தியில் அலுவலகத்திற்கு வருவது குறித்து எதிர்மறையான கருத்து நிலவுகிறது. பலர் அலுவலகத்திற்கு வருவதை விரும்பினாலும் பெரும்பாலான மக்கள் இதை எதிர்ப்பது மட்டும் அல்லாமல் வெறுக்கவும் துவங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications