சென்னை: அமெரிக்கா நியூயார்க் நகரில் ஐநா தலைமையகத்தில் உணவு பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பட்டினி என்பது எத்தனை கொடூரமானது, அதனை போக்க இந்திய அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி உரையாற்றினார்.
நியூயார்க்கில் ஐநா தலைமையகத்தில் இந்தியாவின் உணவு பாதுகாப்பு திட்டம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.

இங்கே இருக்கும் பலர் வாழ்க்கையில் பட்டினி என்பதை அறிந்திருக்க மாட்டீர்கள், ஆனால் எனக்கு தெரியும் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவின் நிஷ் என்ற பகுதியில் 120 மணி நேரம் பட்டினி கிடந்தேன். இந்த நகரம் பல்கேரியாவிற்கும் செர்பியாவிற்கும் இடையே அமைந்துள்ளது என நினைவு கூர்ந்தார்.
"இங்குள்ள பெரும்பாலான இந்தியர்களும் நானும் இந்திய அரசிடமிருந்து நல்ல தரமான மற்றும் குறைந்த செலவில் கல்வியை பெற்றிருக்கிறோம். எனவே ஒரு சிவில் சமூகத்தின் அங்கமாக நமது நாட்டிற்கு நாம் அனைவரும் கடமைப்பட்டு இருக்கிறோம்" என கூறினார்.
ஆதரவற்ற ஏழை குழந்தைகளுக்கு நல்ல முறையில் கல்வி தந்து வருங்காலத்தை சிறந்த முறையில் அமைத்துக் கொள்வதற்கு நாம் உதவ வேண்டும் என தெரிவித்தார்.
ஆதரவற்ற மக்களின் முகத்தில் முகத்தில் புன்னகையை வரவழைப்பது உண்மையான வெற்றி என்றும் அதனை அட்சய பாத்திரம் திட்டம் வெற்றிகரமாக செய்து வருகிறது என சுட்டிக்காட்டினார்.
அட்சய பாத்திர திட்டம் என்பது மத்திய அரசு கொண்டுவந்து செயல்படுத்திய மிகச்சிறந்த பெருமைமிகு திட்டங்களில் ஒன்று என தெரிவித்தார். அட்சய பாத்திரம் திட்டம் குறித்து பெருமையாக பேசிய நாராயணமூர்த்தி ஏழை மக்கள் நமது சமூகத்தின் மீதான நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்றால் இதுநாள் வரை நாம் வளர்த்து வந்த இந்தியா வன்முறையில் அழிந்து விடும் என்றார்.
உலகிலேயே மிகப்பெரிய உணவு பாதுகாப்பு திட்டத்தை மத்திய அரசு நடத்தி வருவதாக கூறிய அவர், பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா 800 மில்லியன் மக்களுக்கு பலன் அளிக்கிறது, இதன் ஒரு பகுதியாக பிஎம் போஷான் திட்டம் நேரடியாக 118 மில்லியன் குழந்தைகளுக்கு பலன் தருகிறது என சுட்டிக்காட்டி பேசினார். இந்தியாவின் அக்ஷய பாத்திர திட்டத்தை ஐக்கிய நாடுகள் சபையும் பின்பற்றலாம் என தெரிவித்தார்.
Story written by : Devika


Click it and Unblock the Notifications